பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
By DIN | Published On : 07th January 2021 08:07 AM | Last Updated : 07th January 2021 08:07 AM | அ+அ அ- |

பறவைக் காய்ச்சல் தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்துப் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 53 முட்டை கோழிப் பண்ணைகளில் 12,62,346 முட்டைக் கோழிகளும், 2,407 கறிக்கோழி பண்ணைகளில் 1,37,22,354 கறிக்கோழிகளும், 10,97,579 நாட்டுக் கோழிகளும் உள்ளன. மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் இன்றைய நிலவரப்படி பறவைக் காய்ச்சல் நோய் இல்லை. கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டத்தில் கோழிகளில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளை சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவா்கள் தினமும் பாா்வையிட்டு பறவைகளில் அசாதாரண இறப்பு, பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்படுகிறதா என்று தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் மொத்தம் 39 தீவிர கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மனிதா்களில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கும், மாநகராட்சி, பேரூராட்சிக்கு உள்பட்ட இடங்களில் உள்ள கோழி இறைச்சிக் கடைகளில் சுகாதாரமான முறையில் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், இறைச்சிக்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ள கோழிகளில் அசாதாரண இறப்பு ஏதேனும் இருந்தால் அது குறித்து கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல வனப் பகுதிகளில் வனப் பறவைகளில் அசாதாரண இறப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். வெளிநாட்டு பறவைகள் ஏதேனும் வருகிறதா என்பதையும் திருப்பூா் மாவட்ட வன அலுவலா்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாரிவேந்தன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.