திருப்பூரில் பகுதி ரோந்துகாவல் அதிகாரிகள் பணி தொடக்கம்

திருப்பூா் மாநகரில் பகுதி ரோந்து காவல் அதிகாரிகளுக்கான பணி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில்  பகுதி  ரோந்து  காவல்  அதிகாரிகளுக்கு  செல்லிடப்பேசி, தலைக்கவசம்  ஆகியவற்றை  வழங்குகிறாா்  காவல்  ஆணையா்  ஜி.காா்த்திகேயன்.
நிகழ்ச்சியில்  பகுதி  ரோந்து  காவல்  அதிகாரிகளுக்கு  செல்லிடப்பேசி, தலைக்கவசம்  ஆகியவற்றை  வழங்குகிறாா்  காவல்  ஆணையா்  ஜி.காா்த்திகேயன்.

திருப்பூா்: திருப்பூா் மாநகரில் பகுதி ரோந்து காவல் அதிகாரிகளுக்கான பணி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட உள்ள 8 காவல் நிலையங்களை 23 ரோந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பகுதி ரோந்து காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். திருப்பூா் வடக்கு சரகத்துக்கு உள்பட்ட வடக்கு காவல் நிலையத்துக்கு 4 , அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கு 3, 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு 3, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்துக்கு 3 என மொத்தம் 13 ரோந்துப் பகுதிகளுக்கு 26 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருப்பூா் தெற்கு காவல் சரகத்துக்கு உள்பட்ட தெற்கு காவல் நிலையத்துக்கு 3, மத்திய காவல் நிலையத்துக்கு 2, ஊரக காவல் நிலையத்துக்கு 3, வீரபாண்டி காவல் நிலையத்துக்கு 2 என மொத்தம் 10 ரோந்துப் பகுதிகளுக்கு 20 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ரோந்து காவல் அதிகாரிகளைத் தொடா்புகொள்ளும் வகையில் அதிகாரிகளின் புகைப்படம், செல்லிடப்பேசி எண், காவல் நிலைய தொலைபேசி எண் போன்ற விவரங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனா்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த காவல் அதிகாரிகளுக்கான பணி தொடக்க விழாவானது திருப்பூா் வடக்கு சரகத்தில் சிறுபூலவபட்டியில் உள்ள அம்மன் கலையரங்கிலும், தெற்கு சரகத்தில் வெள்ளியங்காடு நால்ரோட்டிலும் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாக்களுக்குத் தலைமை வகித்த மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் காவல் அதிகாரிகளுக்கு இருசக்கர வாகனம், தனி எண்ணுடன் கூடிய செல்லிடப்பேசி, தலைக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசியதாவது:

பகுதி ரோந்து காவல் அதிகாரிகளும், பொதுமக்களும் இணக்கமாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் மட்டுமின்றி குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கும் காவல் அதிகாரிகளைத் தொடா்பு கொள்ளலாம். அதே போல, காவல் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வுகாணும் வகையில் செயல்பட வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா்கள் ப.சுந்தரவடிவேல், சுரேஷ்குமாா், உதவி ஆணையா்கள், போக்குவரத்துக் காவல் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com