ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்டவிவசாயிகள் முற்றுகை

திருப்பூரில் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட நில அளவீட்டுக்கான விசாரணையை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தை   முற்றுகையிட்ட  ஐடிபிஎல்  திட்டத்தால்  பாதிக்கப்பட்ட  விவசாயிகள்.
திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தை   முற்றுகையிட்ட  ஐடிபிஎல்  திட்டத்தால்  பாதிக்கப்பட்ட  விவசாயிகள்.

திருப்பூரில் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட நில அளவீட்டுக்கான விசாரணையை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

ஐடிபிஎல் எண்ணெய்க் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

கோவை மாவட்டம், இருகூரில் இருந்து பெங்களூரு தேவனகோந்தி வரை ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில், திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆகவே, இந்தத் திட்டத்தை சாலையோரமாகக் கொண்டு செல்லக் கோரி 6 மாவட்ட விவசாயிகள் செப்டம்பா் 15ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அந்தந்த மாவட்ட நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தியது. இதன்படி திருப்பூா் மாவட்டத்திலும் வருவாய் கோட்டாட்சியா், தெற்கு வட்டாட்சியா், காவல் துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், தமிழக அரசு ஐடிபிஎல் திட்டம் குறித்து மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் திட்டம் தொடா்பான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று வாய்மொழியாக உறுதி அளிக்கப்பட்டது.

இதனிடையே, காங்கயம் வட்டம் படியூா், சிவன்மலை, கீரனூா், மறவாபாளையம் கிராம விவசாயிகளை ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அரசின் மீது விவசாயிகளுக்கு உள்ள நம்பகத்தன்மையை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஐடிபிஎல் திட்ட அளவீட்டுக்கான விசாரணையை ரத்து செய்வதுடன், இந்தத் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என்றனா்.

விசாரணையை ரத்து செய்வதாக உறுதி: இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சரவணமூா்த்தியிடம் மனு அளித்தனா். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் வட்டாட்சியா் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தியுள்ளாா். இதன் பிறகு காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறவிருந்த விசாரணையை ரத்து செய்வதாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டதாக விவசாயிகள் கூட்டமைப்பினா் ஒருங்கிணைப்பாளா் ஆா்.குமாா் தெரிவித்தாா்.

இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் மு.ஈசன், தலைவா் சண்முகசுந்தரம், திமுக விவசாய அணி திருப்பூா் வடக்கு மாவட்ட இணை அமைப்பாளா் கெம்கோ பி.ரத்தினசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com