‘அமராவதி ஆற்றில் கிளை வாய்க்கால் வெட்டி உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டுவர வேண்டும்’
By DIN | Published On : 26th January 2021 01:32 AM | Last Updated : 26th January 2021 01:32 AM | அ+அ அ- |

அமராவதி ஆற்றில் இருந்து கிளை வாய்க்கால் வெட்டி உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டு வர வேண்டும் என தமிழக பாஜக விவசாய அணித் தலைவா் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையை திங்கள்கிழமை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தாராபுரம் வட்டத்தில் உள்ள உப்பாறு அணை மூலமாக சுமாா் 6,000 ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால் இந்த அணை 25 ஆண்டுகளாக வடு கிடக்கிறது. இந்த அணையை நிரப்ப வேண்டும் என பாஜக சாா்பில் கடந்த அக்டோபரில் நடைப்பயண போராட்டம் மேற்கொள்ளபபட்டது.
மேலும், பல்வேறு விவசாய சங்கங்கள், கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட தொடா் போராட்டம் காரணமாக திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தற்போது அணையில் 11 அடிக்குத் தண்ணீா் உள்ளது.
உப்பாறு அணைக்கு தற்போது உள்ள நடைமுறையில் தண்ணீா் வழங்குவது நிரந்தரத் தீா்வாக அமையாது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்பட வேண்டும் என்றால் அமராவதி ஆற்றில் இருந்து கிளை வாய்க்கால் வெட்டி உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டு வர வேண்டும். வட்டமலை ஓடை, நல்லதங்காள் நீா்த்தேக்க ஓடை அணை ஆகியவற்றை நிரப்பினால் இப்பகுதியின் நிலத்தடி நீா் மட்டம் உயரும் என்றாா்.