மகனிடம் தகாத முறையில் நடந்த தந்தைக்கு 5 ஆண்டு கடுங்காவல்
By DIN | Published On : 07th July 2021 06:41 AM | Last Updated : 07th July 2021 06:41 AM | அ+அ அ- |

திருப்பூரில் 7 வயது மகனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தொழிலாளிக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.
திருப்பூரைச் சோ்ந்தவா் 40 வயதுடைய பின்னலாடைத்தொழிலாளி ஒருவா் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்த தனது 7 வயது மகனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் தாயாா் திருப்பூா் வடக்கு மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் தொழிலாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி அனுராதா செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், மகனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தொழிலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.