பூட்டிக் கிடந்த ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகம் முன்பு காத்துக் கிடந்த பொதுமக்கள்
By DIN | Published On : 13th July 2021 03:04 AM | Last Updated : 13th July 2021 03:04 AM | அ+அ அ- |

பூட்டப்பட்ட அலுவலகம் முன்பு மனுக்களுடன் காத்திருந்த பொதுமக்கள்.
காங்கயம்: காங்கயத்தில் உள்ள ஆதிராவிடா் நலத் துறை அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல் தவித்தபடியே காத்துக் கிடந்தனா்.
காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள தனி வட்டாட்சியா் அறை, ஊழியா்கள் பணிபுரியும் அறை ஆகியவற்றில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அறைகள் சீலிடப்பட்டு தற்போது போலீஸ் பாதுகாப்புடன் உள்ளது.
இங்கு செயல்பட்டு வந்த ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகம், பின்புறம் உள்ள கட்டடத்தில் போக்குவரத்துக் காவல் அலுவலகம் எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு பெயா்ப் பலகை இல்லாததால், முன்புறம் உள்ள அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அலுவலகம் பூட்டியிருப்பதால் பல மாதங்களாக கோரிக்கை மனுக்களைக் கொடுக்க முடியாமல் திரும்பிச் சென்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை 12 மணியளவில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு உடுமலை பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் மனுக்களுடன் வந்திருந்தனா். ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனா். இதன் பின்னா், இந்த அலுவலகம் பின்புறக் கட்டடத்தில் செயல்படுவதாக அறிந்து அங்கு சென்ற மக்கள் அங்கும் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனா். அலுவலக ஊழியா்கள் எப்போது வருவாா்கள் என்ற தகவலைச் சொல்லவும் அங்கு யாரும் இல்லை.
எனவே, காங்கயத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலகம் முறையாக செயல்படுவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.