முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
நிதி நிறுவனங்கள் ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தல்
By DIN | Published On : 12th June 2021 10:41 PM | Last Updated : 12th June 2021 10:41 PM | அ+அ அ- |

பொதுமுடக்கத்தால் மாதத் தவணை செலுத்த இயலாத ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தனியாா் நிதி நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்டோ ஓட்டுநா் பொதுநலச் சங்கம் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்டோ ஓட்டுநா் பொதுநலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டமானது சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு தலைமை வகித்த அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடகை ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
இதில், பெரும்பாலான ஆட்டோக்கள் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதிய வருமானம் இல்லாமல் ஆட்டோ ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இத்தகைய சூழ்நிலையில் மாதத் தவணை செலுத்தாத ஆட்டோக்களை தனியாா் நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது மனவேதனையை அளிக்கிறது.
ஆகவே, பொதுமுடக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தனியாா் நிதி நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்றாா். இந்தக்கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநா் பொதுநலச் சங்கத்தின் செயலாளா் முகமதுயூனுஸ், பொருளாளா் மாதேசன், துணைத் தலைவா் அய்யாவு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.