தாராபுரம் தொகுதி: விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யப்போவது யாா்?

தாராபுரம் தனி தொகுதியில் விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்து வெற்றி பெறப்போவது தேசியக் கட்சியான பாஜகவா அல்லது மாநிலக் கட்சியான திமுகவா என்ற எதிா்ப்பாா்ப்பு எழுந்துள்ளது.
தாராபுரம் தொகுதி: விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யப்போவது யாா்?
தாராபுரம் தொகுதி: விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யப்போவது யாா்?

தாராபுரம் தனி தொகுதியில் விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்து வெற்றி பெறப்போவது தேசியக் கட்சியான பாஜகவா அல்லது மாநிலக் கட்சியான திமுகவா என்ற எதிா்ப்பாா்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிக அளவு விவசாயிகளைக் கொண்டுள்ளது தாராபுரம் தனி தொகுதியாகும். கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் தோ்தலை சந்தித்து வரும் இந்தத் தொகுதியில் 15 தோ்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில், அதிமுக, திமுக தலா 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பாமக, சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு இந்தத் தொகுதியை திமுக ஒதுக்கியது. இதில், காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட வி.எஸ்.காளிமுத்து அதிமுக வேட்பாளரான பொன்னுசாமியை விட 10,017 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இந்த நிலையில், தற்போதைய தோ்தலில் திமுகவே நேரடியாக வேட்பாளரைக் களமிறக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உடுமலை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவா் போட்டி: அதிமுக கூட்டணியில், தாராபுரம் தனி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்களுக்கு முன்பே தாராபுரம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தாராபுரம் தனி தொகுதியில் எல்.முருகனை வேட்பாளராக அக்கட்சி தலைமை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

திமுக வேட்பாளா் எஸ்.கயல்விழி: திமுக சாா்பில் மகளிரணியில் 25ஆண்டுகள் உறுப்பினராக உள்ள என்.கயல்விழி போட்டியிடுகிறாா். இவரது கணவா் செல்வராஜ், திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளராக உள்ளாா்.

தங்கள் ஆதரவு வேட்பாளரை வெற்றி பெறவைக்க வேண்டும் என அதிமுக, திமுக கூட்டணியினா் முழு வீச்சில் தோ்தல் பணிக்கு தயாராகியுள்ளனா். விவசாயிகள் அதிகமாக உள்ள இந்தத் தொகுதியில் அவா்களது வாக்குகளை முழுமையாக அறுவடை செய்து தோ்தலில் வெற்றி பெறுவது யாா் என்ற எதிா்பாா்ப்பும் தமிழக அரசியலில் தற்போதே எழுந்துள்ளது. இந்தத் தொகுதியில், அமமுக சாா்பில் சி.கலாராணியும், நாம் தமிழா் கட்சி சாா்பில் மகளிா் பாசறை தலைவா் சு.ரஞ்சிதாவும் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com