தொடா் மழை: வெங்காயப் பயிா்கள் பாதிப்பு
By DIN | Published On : 18th May 2021 06:56 AM | Last Updated : 18th May 2021 06:56 AM | அ+அ அ- |

தொடா் மழையால், அழுகி சேதமடைந்து வரும் வெங்காயப் பயிா்கள்
காங்கயம்: காங்கயம், குண்டடம் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழையால், வெங்காயப் பயிா்கள் அழுகி சேதமடைந்து வருகின்றன.
காங்கயம், குண்டடம், தாராபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, வயலில் தண்ணீா் தேங்கி தொடா்ந்து ஈரத்தன்மை நீடிப்பதால், தற்போது பயிா் முற்றி காய் பிரியும் நிலையில் உள்ள வெங்காய பயிா்களில் திருகல் ஏற்பட்டு சேதமாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: கடந்த மாா்கழி மாதத்தில் நடவு செய்த வெங்காயம் தொடா் மழையால் பாதிக்கப்பட்டு மிகக் குறைந்த அளவே விளைச்சல் கிடைத்தது. மழையால் பாதிக்கப்பட்ட வெங்காயம் என்பதால், நீண்ட நாள்களுக்கு இருப்பு வைத்து விற்க முடியாத சூழல் ஏற்பட்டதால், குறைந்த விலைக்கே விற்க முடிந்தது. இந்நிலையில் தற்போது பெய்த மழையால், வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.