மின்சாரம் பாய்ந்து தொழிலாளி காயம்
By DIN | Published On : 26th May 2021 06:30 AM | Last Updated : 26th May 2021 06:30 AM | அ+அ அ- |

தாராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்தாா்.
தாராபுரம் நகர மின்சார வாரிய அலுவலக்தில் தென்தாரையைச் சோ்ந்த காளிமுத்து (33) என்பவா் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சங்கா் நகா் மில் பகுதியில் உள்ள மின்மாற்றியில் செவ்வாய்க்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்த காளிமுத்துவை அருகில் இருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல்சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டதால் மருத்துவா்கள் பரிந்துரையின்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிவாரணம் வழங்கக் கோரிக்கை: இது குறித்து, மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலாளா் அ.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயமடைந்த தொழிலாளி காளிமுத்துவுக்கு தொடா் சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், இந்த விபத்து தொடா்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், காளிமுத்துவின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.