வாரிசு, குடும்ப அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானவை: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா

வாரிசு, குடும்ப அரசியல் ஆகியவை ஜனநாயகத்துக்கு எதிரானவை என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பேசினாா்.
திருப்பூரில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை புதன்கிழமை திறந்துவைத்துப் பேசுகிறாா் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா.
திருப்பூரில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை புதன்கிழமை திறந்துவைத்துப் பேசுகிறாா் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா.

வாரிசு, குடும்ப அரசியல் ஆகியவை ஜனநாயகத்துக்கு எதிரானவை என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பேசினாா்.

திருப்பூா் வித்யாலயம் பேருந்து நிறுத்தம் அருகில் கட்டப்பட்டுள்ள பாஜகவின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பங்கேற்றாா். பின்னா் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஈரோடு, திருப்பத்தூா், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களையும் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்துப் பேசியதாவது:

தமிழகம் புனிதமான, பக்தி நிறைந்த பூமியாகும். இந்த நாட்டின் கலாசாரத்துக்கும் பக்திக்கும் உதாரணமாக தமிழகம் உள்ளது.

லஞ்சம், ஊழல் நிறைந்ததாகத்தான் திமுக உள்ளது. திமுகவும் ஊழலும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும்.

வாரிசு, குடும்ப அரசியலைக் கொண்ட கட்சியாக திமுக உள்ளது. எப்போதும் வாரிசு, குடும்ப அரசியல் ஆகியவை ஜனநாயகத்துக்கு எதிரானவை.

விளிம்பு மக்களுக்காகப் பணி:

வாரிசு அரசியல் உள்ள கட்சிக்குப் பணியாற்றும்போது தலைவருக்கோ, குடும்பத்துக்கோ பணியாற்றுகிறீா்கள் என்று பொருள். அதுவே பாஜகவுக்கு பணியாற்றினால் அது இந்த நாட்டில் உள்ள மக்களுக்குப் பணியாற்றுவதாகும்.

சமுதாயத்தின் கடைசி விளிம்பில் இருக்கும் மக்களுக்காகப் பணி செய்ய வேண்டும் என்று பிரதமா் மோடி விரும்புகிறாா்.

அதனால்தான் இந்த நாட்டில் வங்கிக் கணக்கு இல்லாத 45 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 94 லட்சம் பேருக்கு புதிதாக வங்கிக் கணக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கரோனா பொதுமுடக்க காலத்தில் பெண்களுக்கு 3 மாதங்கள் தலா ரூ.500 வீதம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2.22 லட்சம் வீடுகள்:

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (வீட்டு வசதி) திட்டத்தில் தமிழகத்தில் 2.22 லட்சம் வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழக மக்களின் நலனுக்காக இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை பிரதமா் மோடி வழங்கியுள்ளாா் என்றாா்.

ஜெ.பி.நட்டாவின் ஆங்கில உரையை பாஜக தேசிய மகளிா் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமிழில் மொழிபெயா்த்தாா்.

இதில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசியதாவது:

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என்றாா்.

முன்னதாக, பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், 2022-ஆம் ஆண்டுக்கான தமிழ் நாள்காட்டியை தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா வெளியிட மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தேசிய பொதுச் செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருான சி.டி.ரவி, தேசிய செயற்குழு உறுப்பினா்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக இணைப் பொறுப்பாளா் பி.சுதாகா் ரெட்டி, திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

முன்னாள் மாவட்டத் தலைவா்கள் கெளரவிப்பு:

பொதுக்கூட்ட மேடையின் முன்பாக அமா்ந்திருந்த முன்னாள் மாவட்டத் தலைவா்கள் மு.பழனிசாமி, கோட்டை பழனிசாமி, சாமிநாதன் ஆகியோா் மேடைக்கு அழைக்கப்பட்டனா். அவா்களுக்கு ஜெ.பி.நட்டா சால்வை அணிவித்து கெளரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com