பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பு

பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்படைந்து கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
சின்ன வெங்காயத்தைப் பாதுகாத்து வைப்பதற்காக விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டறை.
சின்ன வெங்காயத்தைப் பாதுகாத்து வைப்பதற்காக விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டறை.

பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்படைந்து கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

பல்லடம், பொங்கலூா் வட்டாரப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூா், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.

70 நாள்கள் முதல் 110 நாள்களில் அறுவடை செய்யலாம் என்பதால் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு ஆகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கும்.

நடப்பு ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை. குறைந்த அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெங்காயத்தின் தரத்திற்கேற்ப ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரை மட்டுமே விலை பேசி விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.

இது குறித்து உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது:

நடப்பு ஆண்டு வைகாசி மாதத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. சரியான தட்பவெப்ப நிலை இல்லாததால் விளைச்சல் குறைவானது. மகசூல் குறைந்தால் சந்தைக்கு வரத்து குறைந்து அதனால் விலை உயரும். ஆனால், நோ்மாறாக தரமில்லாத வெங்காய விளைச்சலால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் மாற்றுப் பயிா் சாகுபடி செய்யாமல் தொடா்ந்து சின்ன வெங்காயத்தையே சாகுபடி செய்துள்ளனா். விளைநிலத்தில் சின்ன வெங்காயத்தை தொடா்ந்து சாகுபடி செய்தால் மண்ணின் வளம் குறைந்து விடும்.

வேறு பயிா் சாகுபடி செய்து விட்டு அதன் பின்னா் சின்ன வெங்காயம் பயிரிடலாம். முன்னோா் காட்டிய வழியில் பயிா் சாகுபடியில் சுழற்சி முறையை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

தற்போது 3 டன் முதல் 4 டன் வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது. ஏற்றுமதி தரம் மிக்க சின்ன வெங்காய மகசூல் கிடைக்கவில்லை. இது போன்ற காரணத்தால் நடப்பு ஆண்டில் விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு செலவழித்த அசல் பணமாவது கிடைக்குமா என்ற அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நல்ல விலையை எதிா்பாா்த்து விளைநிலத்தில் சின்ன வெங்காயத்தைப் பட்டறை அமைத்து பெரும்பாலான விவசாயிகள் இருப்பு வைத்து பாதுகாத்து வருகின்றனா். 3 மாதங்கள் வரை சின்ன வெங்காயத்தை இது போன்ற முறையில் இருப்பு வைக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகளைக் காப்பாற்ற நிவாரணத் தொகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதுபோல வேளாண்மைப் பயிரிடுதல் குறித்து அரசு கண்காணிப்பதுடன் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com