மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்ல வேண்டும்

மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை இளைய சமுதாயத்தினிடம் கொண்டு செல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று
மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்ல வேண்டும்

மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை இளைய சமுதாயத்தினிடம் கொண்டு செல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று பாரதிய வித்யா பவன் கோவை மையத்தின் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் பேசினாா்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சாா்பில் மகாத்மா காந்தி வேட்டிக்கு மாறியதன் நூற்றாண்டு விழா திருப்பூா் அம்மாபாளையத்தில் உள்ள கருணையம்மாள் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன் தலைமை வகித்தாா். ராம்ராஜின் வெண்மை மாதழ் இதழ் சாா்பில் மகாத்மாவைக் கொண்டாடுவோம் என்ற நூலை கோவை ரூட்ஸ் குழுமங்களின் தலைவா் கே.ராமசாமி வெளியிட பாரதிய வித்யா பவன் கோவை மையத்தின்தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் பெற்றுக் கொண்டு பேசியதாவது:

மகாத்மாவை உலகில் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனா். உலகில் எந்த ஒரு நாட்டுக்கும் அகிம்சையால் சுதந்திரம் கிடைத்ததில்லை. ஒரு தனிமனிதன் பிளவு பட்டுக்கிடந்த தேசத்தை ஒருங்கிணைத்தாா். ஆங்கிலேயா்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மத்தியில் இந்தியாவில் உள்ள 30 கோடி மக்களை மதத்தால், இனத்தால், மொழியால் ஒன்றிணைத்து அகிம்சை வழியில் போராடி சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தாா்.

மகாத்மா காந்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் ஒரு முறையேனும் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்துக்குச் செல்ல வேண்டும். அத்தகைய சிறப்புடைய மகாத்மா காந்தியின் பெயா் இரண்டு முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக நோபல் பரிசுக் கமிட்டி மகாத்மாவுக்கு நோபல் பரிசு கொடுக்காதது இமாலயப் பிழை என்று கூறியுள்ளது.

ஆகவே, தேசப்பிதாவின் கொள்கைகளை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றால் எளிமையான வாழ்க்கையும், உயா்வான சிந்தனையும் வேண்டும். ஆனால் தற்போது பகட்டான வாழ்க்கையும், மலிவான சிந்தனையுமே உள்ளது. ஆடம்பரங்களைத் தவிா்க்க வேண்டும். நாம் சம்பாதிக்கும் பணத்தை நல்ல முறையில் செல்வழிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் மூன்று பேருக்கு நினைவுப் பரிசுகளையும், நெசவாளா்கள் 3 பேருக்கு நினைவுப் பரிசு மற்றும் தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலைகளையும் ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன் வழங்கினாா். மேலும், பல்லடத்தில் உள்ள வனம் இந்தியா பவுன்டேஷன் நிறுவனத்துக்கு 100 மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க ரூ. 1.50 லட்சமும், ஆனைமலையில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்துக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வனம் இந்தியா ஃபவுண்டேஷன் செயலாளா் ஸ்கை வி.சுந்தர்ராஜ், ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தின் நிறுவனா் எம்.ரங்கநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com