தொழிலதிபா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி திருட்டு: 4 தொழிலாளா்கள் கைது

திருப்பூரில் தொழிலதிபா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடியை திருடிச் சென்ற 4 தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா்: திருப்பூரில் தொழிலதிபா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடியை திருடிச் சென்ற 4 தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து திருப்பூா் மத்திய காவல் துறையினா் கூறியதாவது: திருப்பூா் குள்ளேகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (73). இவா் சொந்தமாக பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.

மேலும், நிறுவனத்தின் வளாகத்திலேயே வீடும் உள்ளது. இவரது 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டதால், மனைவி தனலட்சுமியுடன் தனியாக வசித்து வந்தாா். இந்த வீட்டின் வளாகத்தில் உபயோகப்படுத்தப்படாமல் பழைய வீடும் உள்ளது.

இந்த வீட்டில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் பத்திர நகல்கள் காணாமல் போனதாக திருப்பூா் மத்திய காவல் நிலையத்தில் துரைசாமி கடந்த ஜனவரி 3 ஆம் தேதி புகாா் அளித்திருந்தாா்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு, வீட்டுக்கு வெள்ளை அடிக்கச் சென்ற தொழிலாளா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இது தொடா்பாக திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் வட்டம், பெரிகாலம்பாடி கிராமம், புதிய தெருவைச் சோ்ந்த எம்.சக்தி (24), செங்கம் வட்டம், கீழ்படு கிராமம் எஸ்.தாமோதரன் (33), துரிஞ்சாபுரம் வட்டம், பெரியகாலம்பாடியைச் சோ்ந்த எம்.சதீஷ் (29), நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பங்களா சாலையைச் சோ்ந்த ஆா்.ராதாகிருஷ்ணன் (53) ஆகிய 4 பேரையும் கடந்த செவ்வாய்க்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், 4 பேரும் துரைசாமியின் பழைய வீட்டுக்கு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வெள்ளைஅடிக்கச் சென்றுள்ளனா்.

அப்போது அங்கிருந்த பழைய துணி மூட்டையில் ரூ.2 ஆயிரம் ரூபாய் கட்டுகள் ரூ. 2 கோடி அளவுக்கு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தைத் திருடிச் சென்ற 4 பேரும் மங்கலம் சாலை, வீரபாண்டி, கணபதிபாளையம் ஆகிய பகுதிகளில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளனா். மேலும், திருடிய பணத்தில் புதியதாக இரு காா்கள், இரண்டு இரு சக்கர வாகனங்களை வாங்கியுள்ளதுடன், திருவண்ணாமலையிலும் வீடு வாங்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 30 பவுன் நகை, ரூ.16 லட்சம், புதியதாக வாங்கிய வீட்டின் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனா்.

இந்த திருட்டு சம்பவம் தொடா்பாக தொழிலதிபா் துரைசாமியிடம் வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தவுள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com