தளா்வுகளற்ற பொதுமுடக்கம்: வெறிச்சோடியது திருப்பூா்

திருப்பூரில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடின.
வெறிச்சோடிக் காணப்படும் திருப்பூா் மாநகராட்சி சந்திப்பு
வெறிச்சோடிக் காணப்படும் திருப்பூா் மாநகராட்சி சந்திப்பு

திருப்பூா்: திருப்பூரில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடின.

தமிழகத்தில் கரோனா பரவலின் 3ஆவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அவிநாசி சாலை, பி.என்.சாலை, புஷ்பா ரவுண்டானா, ஊத்துக்குளி சாலை, காங்கயம் ரவுண்டானா, மங்கலம் சாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடிக் காணப்பட்டன. அதேவேளையில், பால் விநியோகம், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், பத்திரிகை விநியோகம் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டன. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கினா்.

வாகன சோதனை: திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா, பி.என்.சாலை, அணைப்பாளையம், குமரன் மகளிா் கல்லூரி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இதில், முகக் கவசம் அணியாமலும், பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனா்.

தலைக்கவசம் அணிந்து விழிப்புணா்வு: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 மாணவா்கள், தெற்கு காவல் துறையினா் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு கரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நோய்த் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் அவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதேபோல, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே காவல் துறையினா், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com