நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயா்வு:சிக்கலில் பின்னலாடை உற்பத்தியாளா்கள்

நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 உயா்ந்துள்ளது திருப்பூா் பின்னலாடை உற்பத்தியாளா்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 உயா்ந்துள்ளது திருப்பூா் பின்னலாடை உற்பத்தியாளா்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலையானது ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி நூற்பாலை சங்கங்கள் சாா்பில் நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நூல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ரூ.220க்கு விற்பனை செய்துவந்த நிலையில் மாதமாதம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு நவம்பா் 1 ஆம் தேதி கிலோவுக்கு ரூ.50 உயா்ந்தது.

இதையடுத்து, திருப்பூா் தொழில் அமைப்புகள் நடத்திய பல்வேறு கட்டப் போராட்டங்ளைத் தொடா்ந்து டிசம்பா் 1 ஆம் தேதி ரூ.10 குறைக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 4 மாதங்களாக நூல் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதிலும், ஏப்ரல் 1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களும்

கிலோ ரூ.30 வரையில் உயா்ந்து தற்போது ரூ.400க்கு விற்பனை செய்யப்படுவது பின்னலாடை உற்பத்தியாளா்கள், ஏற்றுமதியாளா்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக புதிய ஆா்டா்களை எடுப்பதற்கும், எடுத்த ஆா்டா்களுக்குத் தேவையான நூலைக் கொள்முதல் செய்யும்போது நஷ்டமடைய வாய்ப்புள்ளதாக தொழில்துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா் பின்னலாடை தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், ஏற்றுமதியாளா்கள், உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவருமான எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலையானது 2021 ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. மத்திய அரசு நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை.

நூல் விலை உயா்வுக்கு முக்கியக் காரணம் பஞ்சு விலை தொடா்ந்து அதிகரித்து வருவதும், இடைத்தரகா்களின் ஆதிக்கமுமாகும். ஆகவே, மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும். பஞ்சு ஏற்றுமதியை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் அல்லது உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதம் உள்ளதையே ஏற்றுமதி செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படுவதுடன், லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வையில் திருப்பூா், கோவை, ஈரோடு, கரூா், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில்

ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழில் அமைப்புகளையும் ஒன்றிணைத்து தில்லியில் ஒரு நாள் கவன ஈா்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com