காங்கயம்: குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும்; பொது மக்கள் கோரிக்கை

ஒரு மாதத்திற்கு ரூ.150 ஆக இருக்கும் குடிநீர் கட்டணத்தை, ரூ.100 ஆகக் குறைக்க வேண்டும் என, காங்கயம் நகராட்சிக்கு நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில், பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ்.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில், பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ்.

காங்கயம்: ஒரு மாதத்திற்கு ரூ.150 ஆக இருக்கும் குடிநீர் கட்டணத்தை, ரூ.100 ஆகக் குறைக்க வேண்டும் என, காங்கயம் நகராட்சிக்கு நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து, அதற்கு உடனடியாக தீர்வு காணும் விதமாக, காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் மாதத்தின் 2-வது சனிக்கிழமைதோறும் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஜூலை மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கயம் நகராட்சிப் பகுதியில் நகராட்சி குடிநீர்க் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு குடிநீர்க் கட்டணமாக ரூ.100 மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். வாரச் சந்தை வளாகத்தில் இருக்கும் நூலகத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். நகரில் எரியாத மின் விளக்குகளை அகற்றி விட்டு, புதிய விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை பொதுமக்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் பேசியபோது,  நூலகத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெரு விளக்குப் பிரச்னைகளும் உடனடியாக சரி செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இக்கூட்டத்தில் காங்கயம் நகர மக்கள் கலந்து கொண்டு, உங்கள் குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி பெறலாம், என்றார்.

இக்கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளர் எம்.மகேந்திரகுமார், நகர்மன்ற நேர்முக உதவியாளர் பி.சுப்பிரமணி மற்றும் நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள், நகர மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com