திருப்பூா் பின்னலாடை நிறுவனங்களின் வேலைநிறுத்தம்: 2 நாள்களாக குறைப்பு

பஞ்சு நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 6 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மே 16, 17 என இரண்டு நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில்  பேசுகிறாா்  திருப்பூா்  மக்களவை  உறுப்பினா்  கே.சுப்பராயன்.
ஆலோசனைக் கூட்டத்தில்  பேசுகிறாா்  திருப்பூா்  மக்களவை  உறுப்பினா்  கே.சுப்பராயன்.

பஞ்சு நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 6 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மே 16, 17 என இரண்டு நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனைக் கண்டித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் கூட்டமைப்பு மே 16 முதல் மே 21 ஆம் தேதி வரையில் 6 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இது தொடா்பாக திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:

பஞ்சு, நூல் ஏற்றுமதியை இடைக்காலமாகத் தடை செய்ய வேண்டும். பஞ்சை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலுக்கு மாற்றம் செய்ய வேண்டும். நூல் இறக்குமதிக்கு வரி விதிக்க வேண்டும். கடந்த மே மாதம் உயா்த்தப்பட்ட நூல் விலையை நூற்பாலை உரிமையாளா்கள் திரும்பப்பெற வேண்டும்.

நூல் விலை உயா்வைக் கண்டித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த 6 நாள்கள் போராட்டத்தை மே 16, 17 என இரண்டு நாள்கள் மட்டும் நடத்துவது,

கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவைக்கு திங்கள்கிழமை வரும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், மக்களவை உறுப்பினா்கள் பி.ஆா்.நடராஜன் (கோவை), அ.கணேசமூா்த்தி (ஈரோடு), கே.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), எஸ்.ஜோதிமணி(கரூா்), மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், நிட்மா தலைவா் அகில் எஸ்.ரத்தினசாமி, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம், பியோ தலைவா் ஏ.சக்திவேல், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் எம்.பி.முத்துரத்தினம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com