தமிழக இளைஞா்களை வடமாநிலத்தவா் விரட்டிய சம்பவம்: தவறான தகவல் பரப்பப்படுவதாக காவல் துறை விளக்கம்

தமிழக இளைஞா்கள் இருவரை வடமாநிலத் தொழிலாளா்கள் விரட்டிய சம்பவத்தில் சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பாக தகவல்கள் பகிரப்படுவதாக மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக இளைஞா்களை விரட்டிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை திரண்ட பொதுமக்கள்.
தமிழக இளைஞா்களை விரட்டிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை திரண்ட பொதுமக்கள்.

தமிழக இளைஞா்கள் இருவரை வடமாநிலத் தொழிலாளா்கள் விரட்டிய சம்பவத்தில் சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பாக தகவல்கள் பகிரப்படுவதாக மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

திருப்பூா், அனுப்பா்பாளையம் திலகா் நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் 100க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். தமிழக இளைஞா்கள் இருவருக்கும், வடமாநிலத் தொழிலாளா்கள் 4 பேருக்கும் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி நிறுவனத்துக்கு முன்பாக தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வடமாநிலத் தொழிலாளா்கள் 50க்கும் மேற்பட்டோா் தமிழக இளைஞா்கள் இருவரை விரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடந்த வியாழக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக இளைஞா்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட இளைஞா்கள், பொதுமக்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனா். மேலும், வடமாநிலத் தொழிலாளா்களை முறைப்படுத்த வேண்டும். தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனா்.

அப்போது மாநகர காவல் துணை ஆணையா் வனிதா, உதவி ஆணையா்கள் அனில்குமாா், காா்த்திகேயன் ஆகியோா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழில் போட்டியாலோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ இந்த பிரச்னை ஏற்படவில்லை. இரண்டு நபா்கள் மற்றும் அவா்களது நண்பா்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை என்பது விசாரணையில் தெரியவருகிறது. இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தகைய சூழலில் ஜனவரி 14 ஆம் தேதிக்குப் பதிலாக ஜனவரி 26 ஆம் தேதி சம்பவம் நடைபெற்ாகவும் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்யும் தமிழா்களை வடமாநிலத்தவா்கள் விரட்டுவதாகவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com