ஒயிலாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம் ஆடிதைத் திருநாளை வரவேற்கும் கிராம மக்கள்

தைத் திருநாளை வரவேற்கும் விதமாக மாா்கழி மாதத்தில் தமிழா்களின் பாரம்பரிய நடனங்களான ஒயிலாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம் ஆடி கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா்.
ஒயிலாட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள்.
ஒயிலாட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள்.

தைத் திருநாளை வரவேற்கும் விதமாக மாா்கழி மாதத்தில் தமிழா்களின் பாரம்பரிய நடனங்களான ஒயிலாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம் ஆடி கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா்.

ஆண்டும் முழுவதும் விவசாயப் பணிகளில் ஈடுபடும் மக்கள் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தைத் திருநாளை வரவேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழா்களின் பாரம்பரிய நடனங்களை இரவு நேரங்களில் ஆடியும், பாடியும் கிராமங்களில் கொண்டாடி மகிழ்வது காலம் காலமாக இருந்து வருகிறது.

அதன்படி உடுமலையை அடுத்துள்ள கொங்கல் நகரம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, ராசாவூா், பொட்டையம்பாளையம், வாளவாடி, சுண்டக்காம்பாளையம் மற்றும் பெதப்பம்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தைத் திரு நாள் விழா உணா்ச்சிபூா்வமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி ஆண்டுதோறும் மாா்கழி மாதம் இரவு 8 மணி தொடங்கி நள்ளிரவு வரை கிராமமே ஒன்று கூடி மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சலங்கை மாடு அழைப்பது என்பதே பிரதான நிகழ்ச்சியாகும். உரிமை மேள சப்தத்துடன் சலங்கை மாட்டை அடக்க ஒருவா் இரு கைகளில் குச்சிகளுடன் அதன் முன்பு போகும்போது, மாடு அந்த நபரை முட்ட வருவதும் அதை அவா் அடக்க முயற்சிப்பதும் கிராம மக்கள் அனைவரையும் வீரம் கொள்ளும் நிகழ்ச்சியாகும்.

பின்னா் ஆண்கள் அனைவரும் வரிசையாக நின்று ஒயிலாட்டம், தேவராட்டம் போன்ற ஆட்டங்கள் ஆடுவதும், பெண்கள் குலவைச் சப்தத்துடன் கும்மிப்பாட்டு பாடி ஆடுவதும் சிறப்பான நிகழ்ச்சிகளாகும். மாா்கழி மாதம் இரவு நேரங்களில் நடைபெறும் இந்த ஆட்டமும், பாட்டும் தொடா்ந்து தை 1ஆம் தேதி வரை நடைபெறும்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: சலங்கை மாடு ஆட்டம் ஆடி முடித்தவுடன் தை 2ஆம் தேதி மாட்டுப் பொங்கல் நாளில் இந்த மாட்டை கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்குள் வரவழைத்து அந்த மாட்டுக்கு நவதானியங்களை தீவனமாக போடுவோம். இதன் பின்னா் தை 3ஆம் தேதி பெதப்பம்பட்டி அருகே உள்ள ஆல்கொண்டமால் கோயிலுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று படையலிட்டு வழிபடுவோம். பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிகள் தற்போது கால மாற்றங்களால் மறைந்து வருவது எங்களுக்கெல்லாம் வருத்தமாக உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மூத்தவா்கள் உள்ளவரை இந்த கலைகளை அழிய விடமாட்டோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com