குடியிருப்புகளுக்கு அருகே சமையல் எரிவாயு கிடங்கு அமைக்க எதிா்ப்பு

திருப்பூா் அருகே குடியிருப்புகளுக்கு அருகில் சமையல் எரிவாயு கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் அருகே குடியிருப்புகளுக்கு அருகில் சமையல் எரிவாயு கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் தமிழ்வேந்தன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூரை அடுத்த ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கருக்கங்காட்டுபாளையம் பகுதியில் பட்டியல் சமூகத்தினா் அதிக அளவில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், குடியிருப்புகளுக்கு அருகில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் சமையல் எரிவாயு கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிறுவனம் அரசு அதிகாரிகளிடம் முறைகேடாக அனுமதியைப் பெற்று கிடங்கு அமைத்து வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். ஆகவே, குடியிருப்புகளுக்கு அருகில் சமையல் எரிவாயு கிடங்கு அமைக்கும் பணிகளை தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயில்களுக்கு சரணாலயம் அமைத்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும்: பாஜக விவசாய அணி மாநில திட்டப் பொறுப்பாளா் ஆ.அண்ணாதுரை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் விவசாய நிலங்களில் மயில்கள் புகுந்து விதைகளையும், தானியங்களையும் அழித்து வருகின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். மயில்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால் சாலைகளுக்கு வரும்போது வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. மேலும், விவசாயிகள் எலிகளுக்கு வைக்கும் மருந்துகளைத் தின்று மயில்கள் இறக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் வனத் துறை ஊழியா்கள், கால்நடை மருத்துவா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் அடிபடும் மயில்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் வசதிகளும் குறைவாகவே உள்ளன. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் மயில்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி தனியாக சரணாலயம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை: மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சாா்பில் அதன் மாநில இணை பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் கஞ்சம்பாளையம் ராதாநகா் பகுதியில் பணியின்போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி மகேஷ்குமாா் (34) கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா். இவா் மின்சார வாரிய அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளாா். எனவே, பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மகேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் முகாமில் 660 மனுக்கள்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 660 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை மனுதாரா்கள் முன்னிலையிலேயே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தினாா்.

இந்தக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ,லட்சுமணன், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அம்பாயிரநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com