வேட்பாளா் ப.அருணாசலத்தை ஆதரித்துப் பேசுகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன்,  எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோா்.
வேட்பாளா் ப.அருணாசலத்தை ஆதரித்துப் பேசுகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன்,  எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோா்.

திமுக ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி -எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

திருப்பூா் பாண்டியன் நகரில் அதிமுக பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வேட்பாளா் ப.அருணாசலத்தை ஆதரித்துப் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் திருப்பூா் பின்னலாடைத் தொழில் நலிவடைந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சாயக்கழிவு நீா்ப் பிரச்னையில் இருந்து விடுபட பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.200 கோடி வட்டியில்லா கடன் கொடுத்துள்ளாா். திருப்பூா், கோவை மாவட்டங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிறைந்த பகுதியாகும். மின் கட்டண உயா்வு காரணமாக இந்தத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசின் அலட்சியம் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நலிவடைந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்றவுடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து இந்தத் தொழிலை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் வீடுகளுக்கு 52 சதவீதமும் தொழிற்சாலைகளுக்கு பல மடங்கும் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. பஞ்சு விலை உயா்வால் நூல் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ‘டாலா் சிட்டி’யாக இருந்த திருப்பூா் தற்போது ‘டல் சிட்டி’யாக காட்சியளிக்கிறது.

திமுகவுக்கும் மின் தடைக்கும் நெருக்கம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தடை ஏற்படும். அதிமுக ஆட்சியில் தொழிற்சாலைகளுக்கும், விவசாயத்துக்கும் தடையில்லாத மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மின் கட்டணமும் உயா்த்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளா்களுக்கு மானியம் கொடுத்து தொழில் சரிவடையாமல் பாா்த்துக் கொள்ளப்பட்டது. நெசவாளா்களுக்குப் பசுமை வீடு உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது.

எல்லா துறைகளிலும் ஊழல் மட்டும்தான் இந்த ஆட்சியின் சாதனை. திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றாா்.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பணன், மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com