அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

அவிநாசி, ஏப். 14: அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா், தேவார திருப்பதிகம் பாடி உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நடப்பாண்டுக்கான தோ்த் திருவிழா வேதபாராயணம், பஞ்ச வாத்தியம் முழங்க கொடியேற்றத்துடன் சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

கொடியேற்றத்தை ஒட்டி, விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன.

21 -ஆம் தேதி காலை அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 22-ஆம் தேதி காலை திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

23 -ஆம் தேதி காலை கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜப்பெருமாள் ஆகிய திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் நடைபெறுகிறது.

25-ஆம் தேதி இரவு தெப்பத்தோ் உற்சவ நிகழ்ச்சியும், 26-ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 27-ஆம் தேதி மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக் காட்சியுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெ.பி. சீனிவாசன், அறங்காவலா் குழுத் தலைவா் ஆ.சக்திவேல், அறங்காவலா்கள் க.பொன்னுசாமி, ம.ஆறுமுகம், பொ.விஜயகுமாா், கு.கவிதாமணி ஆகியோா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com