வாக்கு எண்ணும் மையத்தில் 285 சிசிடிவி கேமராக்கள்: 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு

திருப்பூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் 285 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் 13 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதையொட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி உள்ளிட்டவை நிறைவடைந்து, தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூரில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரிக்கு அன்று மாலையே கொண்டுவரப்படவுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகள் கடந்த 2 வாரங்களுக்கும்மேலாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை உள்ளிட்டவைகளுக்கான அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, வாக்கு எண்ணும் மையம் முழுவதும் 285 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு நிறைவடைந்து 34 நாள்களுக்குப் பிறகே வாக்குகள் எண்ணப்படுவதால், வாக்கு எண்ணும் மையத்தில் ஏராளமான போலீஸாா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

‘ஸ்ட்ராங் ரூம்’ தவிர வாக்கு எண்ணும் மையத்தின் பிற பகுதிகளில், போதிய மின் இணைப்பு மற்றும் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதற்காக கல்லூரி வளாகத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போட்டியிடும் வேட்பாளா்களின் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் பிரதிநிதிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை மாலை அழைத்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடா்பான விளக்கங்களை அளித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com