வாக்காளா்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும்: பாதுகாப்பு அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

வாக்களிக்க வரும் வாக்காளா்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூரில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள போலீஸாருக்கான ஆலோசனைக் கூட்டம் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு தலைமை வகித்து பேசியதாவது:

வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளவுள்ள போலீஸாா் வாக்களிக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும். வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டா் தொலைவுக்கு கட்சிக் கொடிகள், சின்னங்கள் இல்லாததை உறுதிசெய்துகொள்ள வேண்டும். வாகனங்களை 200 மீட்டருக்குள் நிறுத்த அனுமதிக்கக் கூடாது.

கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியவா்களைத் தவிர வேறு யாருக்கும் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கக் கூடாது. வாக்குச் சாவடிகளில் கைப்பேசியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. போலீஸாரும் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்றுகிறவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com