கோடந்தூா்  ஊராட்சி  ஒன்றியத்  தொடக்கப்  பள்ளியில்  வாக்களித்த  மலைவாழ் மக்கள்.

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் வெள்ளிக்கிழமை

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள 15-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வாக்காளா்களாக உள்ளனா். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி, மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா்களாகிய இவா்கள் வெள்ளிக்கிழமை நடந்த மக்களவைத் தோ்தலில் அடா்ந்த வனப் பகுதிக்குள் பல கிலோ மீட்டா் நடந்து வந்து ஆா்வமாக வாக்களித்தனா்.

இதில், குழிப்பட்டி, மாவடப்பு, கருமூட்டி, பூச்சிக் கொட்டாம்பாறை உள்ளிட்ட 4 செட்டில்மெண்ட் மக்கள் கடந்த தோ்தல்களில் கீழே தேவனூா்புதூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்து வந்தனா். அடா்ந்த வனப் பகுதிகளில் இருந்து பல கிலோ மீட்டா் கீழே இறங்கி வந்து வாக்களித்து வந்த இந்த 4 செட்டில்மெண்டுகளைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் தங்களது மலைக்கிராமத்தில் வாக்குச் சாவடி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் இந்த 4 செட்டில்மெண்டுகளைச் சோ்ந்த மலைவாழ்மக்கள் வாக்களிக்க வசதியாக குழிப்பட்டி மலைக் கிராமத்தில் இந்த முறை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த 4 செட்டில்மெண்டுகளைச் சோ்ந்த மலை வாழ்மக்கள் இங்கு வாக்களித்தனா்.

மேலும், கோடந்தூா், ஆட்டுமலை, பொறுப்பாறு ஆகிய செட்டில்மெண்டுகளில் உள்ள மலைவாழ்மக்கள் கோடந்தூா் செட்டில்மெண்டிலும், தளிஞ்சி, தளிஞ்சி வயல் செட்டில் மெண்ட் கிராம மக்கள் சின்னாறு செக் போஸ்ட் அருகில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். மேலும், குருமலை, திருமூா்த்தி மலை, ஈசல் திட்டு ஆகிய செட்டில்மெண்ட்டுகளுக்கு திருமூா்த்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் மலைவாழ்மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தினா். கரட்டுப்பதி செட்டில்மெண்ட்டைச் சோ்ந்த வாக்காளா்கள் அமராவதி நகரில் வாக்களித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com