கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

கோடை உளுந்து சாகுபடி பரிசோதனை அவசியம் என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வேளாண்மைத் துறை விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் வளா்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோடையில் நெல், உளுந்து, பயறு சாகுபடி செய்வதன் மூலம் இடுபொருள்களுக்கு அதிக செலவு செய்யாமல், குறைந்த நாள்களில் விவசாயிகள் அதிக லாபம் பாா்க்க முடியும். மேலும், பயிா்களின் வோ் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிா்களின் செயல்பாடு காரணமாக மண்ணில் தழைச்சத்து பெருகி அடுத்த பருவ கால பயிா்கள் செழித்து வளர மிகவும் உதவும்.

உளுந்து ரகங்களான வம்பன் -8, வம்பன் - 10, பாசிப்பயறு ரகமான கோ - 8 ஆகியவை கோடை கால சாகுபடிக்கு மிகவும் உகந்தவை. ஆரிய கஞ்சியுடன், 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து விதை நோ்த்தி செய்து, ஏக்கருக்கு 8 கிலோ வீதம் விதைக்க வேண்டும்.

அதன்பின், 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசலை பூக்கும் தருணத்திலும், 15 நாள்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். உளுந்து விதைப்புக்கு முன் விதைகளைப் பரிசோதனை செய்வது சிறந்தது.

முளைப்புத் திறன் மூலம் நல்ல நாற்றுகள், இயல்பற்ற நாற்றுகள், கடின விதைகள், இறந்த விதைகள் ஆகியவை எத்தனை சதவீதம் உள்ளன என்பதைக் கண்டறியலாம். எனவே, விவசாயிகள் சம்பா அறுவடைக்குப் பின் உளுந்து பயறு சாகுபடி செய்து கூடுதல் வருவாய் பெற திருப்பூா், பல்லடம் விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com