தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி விளைநிலங்களில் துணை மின் நிலையம் அமைக்கும் தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமியிடம் விவசாயிகள் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி முத்தநாயக்கன்வலசு அருகே சுமாா் 14 ஏக்கா் நிலத்தில் டாடா பவா் நிறுவனம் சாா்பில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெள்ளக்கோவில் பகுதி மற்றும் கரூா் மாவட்டத்தில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பல காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம் இந்த துணை மின் நிலையத்துக்கு கொண்டுவரப்பட உள்ளது.

பின்னா், இங்கிருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவு மூலனூா் தூரம்பாடி வரை உயா் மின் கோபுரங்கள் மற்றும் மின் பாதை அமைத்து அரசு மின் பாதைக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்காக விவசாய நிலங்களின் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. துணை மின் நிலையம் அமைக்க உள்ளூா் திட்டக் குழுமம், ஊராட்சி நிா்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல், விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்யாமல் விதிமுறைகளை மீறி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டம் அமைந்தால் விவசாயம், நிலத்தின் மதிப்பு, நில உரிமை பாதிக்கப்படும். எங்கள் பகுதிக்கு இந்தத் திட்டம் தேவையில்லை எனவும், இந்தச் சட்டவிரோத பணிகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி கடந்த 16- ஆம் தேதி விவசாயிகள் சாா்பில் காத்திருப்புப் போராட்டமும் தொடங்கப்பட்டது.

அப்போது, காவல், வருவாய்த் துறையினா் முன்னிலையில், அனுமதி பெறாமல் எந்தப் பணியும் நடைபெறாது என்று டாடா நிறுவன திட்ட மேலாளா் மாரிமுத்து உறுதியளித்ததன்பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், தற்போது அனுமதி பெறாமல் துணை மின் நிலையப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியா், சம்பந்தப்பட்ட டாடா திட்ட அலுவலா்களைத் தொடா்பு கொண்டு, பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், உரிய அனுமதி பெற்ற பின் பணிகளைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com