நீா்மோா் வழங்கும் பணியை தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.
நீா்மோா் வழங்கும் பணியை தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் வரும் பொதுமக்கள், அரசு அதிகாரிகளுக்கு நீா்மோா் வழங்க பணியை ஆட்சியா் தா. கிறிஸ்துராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

அவிநாசி: திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் வரும் பொதுமக்கள், அரசு அதிகாரிகளுக்கு நீா்மோா் வழங்க பணியை ஆட்சியா் தா. கிறிஸ்துராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நாள்தோறும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி வருகிறது. தொழிலாளா்கள் நிறைந்த மாவட்டமான திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை 103 டிகிரி வெயில் பதிவானது. திங்கள்கிழமை 102 டிகிரி பதிவானது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்பதாலும், அனல் காற்று வீசும் என்பதாலும் திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுபோல பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வழங்கியுள்ளாா். அதன்படி உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். பயணத்தின்போது, குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஒ.ஆா்.எஸ். கரைச்சல், இளநீா், நீா்மோா் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பை தவிா்க்க வேண்டும். வெளிா் நிறமுள்ள, காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது, குடை கொண்டுச் செல்ல வேண்டும்.

நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்லக் கூடாது. குழந்தைகள் பருக இளநீா் போன்ற நீா் ஆகாரங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளை தாக்கும் வெப்பம் தொடா்பான நோய்களை கண்டறிய வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பாா்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீா் நீரிழப்பை குறிக்கலாம். எனவே அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பகலில் வெளியே செல்ல வேண்டும் என்பது உள்பட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குடிநீா் மற்றும் ஓ.ஆா்.எஸ். கரைச்சல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலா் பயனடைந்து வருகிறாா்கள்.

இதற்கிடையே அத்தியாவசிய தேவைகள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வருகின்றனா். இதுபோல அரசு அதிகாரிகளும் ஆயிரக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா்.

எனவே கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள மாவட்ட நிா்வாகம் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் என நாள்தோறும் 650 முதல் 700 பேருக்கு நீா்மோா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 6-ஆம் தேதி வரை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நீா்மோா் வழங்கப்படும். இப்பணியை ஆட்சியா் தா. கிறிஸ்துராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com