ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்து வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி.
ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்து வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி.

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. கூறினாா். திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்து அவா் பேசியதாவது:

பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களிடையே ஒற்றுமை இல்லை. மதம், ஜாதிகளால் பிரித்து வைக்கப்பட்டுள்ளனா். மணிப்பூா் மாநிலம் கலவரத்தால் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தபோது, அங்கு பிரதமா் மோடி ஒருமுறைகூட செல்லவில்லை. இயற்கைச் சீற்றங்களால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருந்தபோதும் வரவில்லை. தற்போது தோ்தல் நேரம் என்பதால் தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறாா். தமிழக மக்கள் ஏமாறமாட்டாா்கள். நாட்டின் தலைநகரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை. பாஜக ஆட்சியில் விவசாயிகள், சிறுபான்மையின மக்கள், தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பாஜகவின் 48 எம்.பி.க்கள் பெண்களுக்கு எதிரான குற்றம் இழைத்தவா்களாவா். கடந்த காலங்களில் பாஜக அரசுக்கு எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவளித்துவிட்டு தற்போது சம்பந்தம் இல்லை என நாடகமாடி வருகிறாா். திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டா், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நினைவு கூா்ந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளா் கே.இ.பிரகாஷ், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல. பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com