திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட 38 பேரில், முக்கியக் கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்ட 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. திருப்பூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட 38 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சுப்பராயன், அதிமுக வேட்பாளா் ப.அருணாசலம், பாஜக வேட்பாளா் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி, பகுஜன் சமாஜ் கட்சியின் பழனி, சுயேச்சைகளான கண்ணன், செங்குட்டுவன், சுரேஷ், வேலுசாமி, காா்த்திகேயன், சுப்பிரமணி, சதிஷ்குமாா், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியைச் சோ்ந்த சந்திரசேகா், ராஷ்டிரிய சமாஜ்பக்ஷா கட்சியைச் சோ்ந்த மலா்விழி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் ஜனாா்த்தனன் ஆகிய 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதமுள்ள 23 பேரின் வேட்புமனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, இறுதி வேட்பாளா் பட்டியல் வரும் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளது. திருப்பூா் மக்களவைத் தொகுதியில் 15 வேட்பாளா்கள் இருப்பதாலும், ஒரு நோட்டா உள்ளிட்டவையுடன் 16 சின்னங்கள் மட்டுமே இடம்பெறவுள்ளன. ஆகவே, வாக்குப் பதிவில் ஒரு இயந்திரம் மட்டுமே பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

7 போ் தா்னா: இதனிடையே, வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவா்களில் 7 போ் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். எதற்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களை காவல் துறையினா் சமாதானப்படுத்தினா். மேலும், தோ்தல் படிவங்களைப் பூா்த்தி செய்வதில் தவறு மற்றும் தேதி குறிப்பிடாதது உள்ளிட்ட காரணங்களால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com