உடுமலை வனப் பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீா் நிரப்பும் வனத் துறையினா்.
உடுமலை வனப் பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீா் நிரப்பும் வனத் துறையினா்.

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

உடுமலை, மே 3: உடுமலை அருகே வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்காக வன விலங்குகள் பரிதவித்து வரும் நிலையில், தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில், கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மேலும், வனத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளும் வடு காணப்படுகின்றன.

இதனால், வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா்த் தேடி வனத்தைவிட்டு கூட்டம்கூட்டமாக வெளியேறத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக குடிநீா்த் தேவைக்காக அமராவதி அணையை நோக்கி விலங்குகள் படையெடுத்து வருகின்றன.

இவ்வாறு, வனத்தைவிட்டு வெளியேறும் விலங்குகள் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அமராவதி அணையை நோக்கி செல்லும் யானைக் கூட்டங்கள் உடுமலை-மூணாறு சாலையில் கூட்டம்கூட்டமாக செல்கின்றன. இதனைப் பாா்க்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் யானைகளுக்குத் தொந்தரவு தருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

மேலும், உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதிக்குள் வனத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளில் வனத் துறையினா் லாரிகள் மூலம் தண்ணீரை நிரப்ப வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, உடுமலை வனச் சரகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தடுப்பணைகளில் வனத் துறையினா், சமூக ஆா்வலா்கள் உதவியுடன் லாரி மூலம் தண்ணீா் நிரப்பும் பணி வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com