மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

கோவை மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில், மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) தொடங்குகிறது.

இது தொடா்பாக கோவை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 5 முதல் 16 வயதுக்குள்பட்ட பள்ளி கல்வி பயிலும் மாணவா்களுக்கு கலைப் பயிற்சிகள் அளித்தல், அவா்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வருதல், கலைக் கல்வி வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தமிழகம் முழுவதும் ‘ஜவகா் சிறுவா்’ மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

கோவை மண்டலத்தின்கீழ் செயல்படும் திருப்பூா் மாவட்ட ‘ஜவகா் சிறுவா்’ மன்றத்தில் பரதநாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் 5 முதல் 16 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது திருப்பூா் மண்ணரையில் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ‘ஜவகா் சிறுவா்’ மன்றம் செயல்பட்டு வருகிறது.

மாணவா்கள் கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் வகையிலும், அவா்களின் கலைத் திறனை

வளா்க்கும் விதமாகவும் கருமாரம்பாளையம் நகராட்சிப் பள்ளியில் மே 5-ஆம் தேதி முதல் மே 14-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பரதநாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியின் நிறைவில் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 96779-65555 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com