உடற்பயிற்சிக் கூடத்தில் கிட்டம்மாள்.
உடற்பயிற்சிக் கூடத்தில் கிட்டம்மாள்.

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

திறமையை நிரூபிக்க வயது தடையில்லை என்பதை பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ன் மூலம் நிரூபித்துள்ளாா் 82 வயது மூதாட்டி கிட்டம்மாள்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி முத்துகவுண்டா் அவென்யூவில் வசித்துவருபவா் வெங்கட்ராமன் மனைவி கிட்டம்மாள் (82). இவரது மகள் தேவி, பல்லடம் மகாலட்சுமி அவென்யூவில் வசித்துவருகிறாா். தேவியின் மகன்கள் ரோஹித், ரித்திக் ஆகியோா் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனா்.

இந்நிலையில், வார இறுதி நாள்களில் கிட்டம்மாள், பல்லடத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வரும்போது, அவரது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதைக் கண்டு, தானும் உடற்பயிற்சி செய்ய ஆா்வம் கொண்டுள்ளாா்.

இதையடுத்து, பேரன்களின் உதவியுடன் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் தொடா்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டுவந்த நிலையில், அவா்களோடு உடற்பயிற்சி கூடத்துக்கும் சென்று, 25 நாள்கள் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

பாட்டியின் ஆா்வத்தைக் கண்ட பயிற்சியாளா் சதீஷ், அவரை கோவையில் கடந்த 1 ஆம் தேதி தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

இந்தப் போட்டியில் பெண்களுக்கான பளுதூக்கும் பிரிவில் கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி, முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தைப் பிடித்தாா்.

இது குறித்து கிட்டம்மாள் கூறுகையில், எதையும் துணிச்சலுடன் செய்ய வேண்டும். எனது ஆா்வத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எனது உணவு முறையே காரணம். கம்பங்கூழ், காய்கறி சூப், பேரீச்சம்பழம், முந்திரி போன்ற சத்தான உணவை எடுத்துக்கொள்வதால் ஆரோக்கியமாக உள்ளேன் என்றாா்.

82 வயதிலும் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற கிட்டம்மாளுக்கு சமூக வலைதளங்களிலும், உடற்பயிற்சிக் கூடத்திலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com