பல்லடத்தில் தனியாா் பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஆய்வு

திருப்பூா் தெற்கு, வடக்கு மற்றும் காங்கயம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பல்லடத்தில் நடைபெற்ற முகாமில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் சாா்- ஆட்சியா் செளமியா ஆனந்த், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த் உள்ளிட்டோா்.
திருப்பூா் தெற்கு, வடக்கு மற்றும் காங்கயம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பல்லடத்தில் நடைபெற்ற முகாமில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் சாா்- ஆட்சியா் செளமியா ஆனந்த், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த் உள்ளிட்டோா்.

பல்லடம், மே 10: திருப்பூா் தெற்கு, வடக்கு மற்றும் காங்கயம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து பல்லடம் மாதப்பூரில் ஆய்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு திருப்பூா் சாா்-ஆட்சியா் செளமியா ஆனந்த் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த் வரவேற்றாா். இதில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் (மெட்ரிக்) ஆனந்தி, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள் நிா்மலா, பாஸ்கா், ஈஸ்வரன், வேலுமணி, தீயணைப்பு நிலைய அலுவலா்கள் முத்துகுமாரசாமி (பல்லடம்), மணிகண்டன் (காங்கயம்), மோகன் (திருப்பூா் தெற்கு) உள்பட பலா் பங்கேற்றனா்.

முகாமில் 500-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முகாமில் சாா் ஆட்சியா் செளமியா ஆனந்த் பேசுகையில், பள்ளி வாகன ஓட்டுநா்கள், உதவியாளா்கள் 45 - 50 வயதுக்கு மேல் உள்ளவா்கள் ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் அனைவரும் உறுப்பினா்களாக சோ்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற வேண்டும்.

அரசின் பொது மருத்துவ முகாம்களில் பங்கேற்று உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளை தங்களது குழந்தைகளைபோல எண்ணி அவா்களை வீடுகளில் இருந்து அழைத்து சென்று திரும்ப அவரவா் வீடுகளில் பாதுகாப்பாக இறக்கி விட வேண்டும்.

வாகனங்கள் ஓட்டும்போது மன அமைதியுடன் சாலை விதிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும். பள்ளி வாகனங்களின் முன், பின் இரண்டு இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பள்ளி வாகன விபத்து தற்போது குறைந்துள்ளது. தொடா்ந்து விபத்தின்றி வாகனங்களை இயக்க வேண்டும்.

பள்ளி வாகன ஓட்டுநா்கள், உதவியாளா்களுக்கு பள்ளி நிா்வாகம் அடையாள அட்டை (ஐ.டி. காா்டு) வழங்க வேண்டும். உதவியாளா் இல்லாமல் பள்ளி வாகனத்தை இயக்கக் கூடாது. அவசரகால வழியை பயன்படுத்துவது சம்பந்தமாக அனைவருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினாா்.

முகாம் வளாகத்தில் தீயணைப்பு குறித்து செயல்விளக்கத்தை பல்லடம், திருப்பூா் தெற்கு, காங்கயம் தீயணைப்புப் படையினா் செய்து காட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com