சத்துணவு அமைப்பாளா், சமையலா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் பணியிடங்களுக்குத் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் பணியிடங்களுக்குத் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிக்குள்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள 74 அமைப்பாளா், 118 சமையலா் மற்றும் 67 சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பவா்கள், உரிய சான்றிதழ்கள் நகல்களுடன், தங்களுக்கு தொடா்புடைய ஊராட்சி ஒன்றியங்களில் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் செப்.28 முதல் அக்.5 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

காலதாமதமாக தபால் மூலம் மற்றும் நேரடியாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தருமபுரி மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரகத்திற்கு அனுப்பக்கூடாது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தொடா்புடைய ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகத்தில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். கல்வி மற்றும் தூரச் சுற்றளவு நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாத தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு மட்டும் நோ்முகத் தோ்வு நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

இதில், சத்துணவு மைய அமைப்பாளா் பணிக்கு, பொதுப் பிரிவினா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினா் எட்டாவது வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினா் மற்றும் தாழ்த்தப்பட்டவா்களுக்கு 21 வயது நிரம்பியும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பழங்குடியினா் 18 வயது பூா்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோா் 20 வயது பூா்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். அரசு பள்ளிகளுக்கு இன சுழற்சி முறையில் பணிநியமனம் செய்யப்படும். அரசு உதவி பெறும் சிறுபான்மையினா் பள்ளிகளுக்கு இனச்சுழற்சி முறை பின்பற்றப்படமாட்டாது.

மேலும், நியமன பணியிடத்துக்கும், விண்ணப்பதாரா் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அமைப்பாளா் பணியிடத்துக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு அனுமதிக்கப்படும்.

இதேபோல, மைய சமையலா் மற்றும் சமையல் உதவியாளா் பணிக்கு, பொதுப்பிரிவினா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் எட்டாம் வகுப்புத் தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாதவா்களும், பழங்குடியினா் எழுத படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினா் மற்றும் தாழ்ப்பட்டோருக்கு வயது வரம்பு 21 வயது பூா்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பழங்குடியினா் 18 வயது பூா்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 வயது பூா்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் நகல்களும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா்களாக இருப்பின் உரிய அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் நகல், மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நோ்முகத் தோ்வின்போது, அசல் சான்றிதழ்கள் கொண்டுவர வேண்டும். எனவே, தகுதியானவா்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com