"வரலாற்றை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்'

வரலாற்றை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்;  இதற்காக மத்திய,  மாநில அரசுகள் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் தொல்லியல் ஆய்வறிஞர் இரா. பூங்குன்றன்.

வரலாற்றை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்;  இதற்காக மத்திய,  மாநில அரசுகள் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் தொல்லியல் ஆய்வறிஞர் இரா. பூங்குன்றன்.
தருமபுரியில் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்க்சீய அறிஞர் தேவபேரின்பன் நினைவுக் கூட்டத்தில்  அவர் மேலும் பேசியது:
தொல்லியல் துறையில் சங்க காலம் குறித்த ஆய்வை மேற்கொள்ள தனிப் பிரிவு  உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்தே நிலுவையில் இருக்கிறது. வெளிநாடுகளில் தொல்லியல் ஆய்வுகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம் இங்கு தரப்படுவதில்லை.  
தமிழகம் நகர நாகரிகம் சிறந்து விளங்கிய பகுதி.  கீழடி ஆய்வுகள் அதைத்தான் காட்டுகின்றன.  வரலாற்றை அறிவியல்பூர்வமாக ஆராய வேண்டும்.  மத்திய,  மாநில ஆட்சியாளர்களுக்கு இதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
வீடுகள் கட்டுதல்,  வேளாண்மை போன்ற பணிகளுக்காக தொல்லியல் எச்சங்களை அழிப்பதை தடுக்க வேண்டும்.  இதுகுறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் பூங்குன்றன்.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து தொல்லியல் ஆய்வறிஞர் தி. சுப்பிரமணியன் பேசியது:
கீழடி ஒரு சங்க கால நாகரிகம்.  இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.  தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட ஓடுகள்,  ஏராளமான மணிகள்,  சங்கு வளையல்கள்,  தந்தத்தால் ஆன சீப்பு,  தாயக்கட்டைகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன.
கழிவுநீர்க் கால்வாய்கள், தொட்டிகள் பல கண்டறியப்பட்டுள்ளன. இவை நகர நாகரிகத்தை உறுதிப்படுத்துகின்றன. மத்திய தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை இனி மாநில தொல்லியல் துறை மேற்கொள்ளவுள்ளது என்றார் சுப்பிரமணியன்.
கீழடி ஆய்வை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மார்க்சிய ஆய்வறிஞர் தேவபேரின்பன் எடுத்த முயற்சியான தமிழக வரலாறு எழுதும் பணியைத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.  இதற்காக வரும் டிசம்பரில் முன்னணி தமிழறிஞர்களை அழைத்து ஆலோசனை நடத்துவது என்றும் முடிவு  செய்யப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர் இரா. செந்தில்,  ஆய்வாளர்கள் சுகவன முருகன்,  இரா. குழந்தைவேலன், ஆ. அன்பழகன், பேராசிரியர் இ.பி. பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முடிவில் சோ. அருச்சுனன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com