தீபத் திருவிழாவை விடிய, விடியக் கொண்டாடிய அலக்கட்டு மலை கிராம மக்கள்!

தருமபுரி மாவட்டம், அலக்கட்டு மலை கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு தொடங்கி விடிய, விடிய காரத்திகைத் தீபத் திருவிழாவைக் கொண்டாடினர்.

தருமபுரி மாவட்டம், அலக்கட்டு மலை கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு தொடங்கி விடிய, விடிய காரத்திகைத் தீபத் திருவிழாவைக் கொண்டாடினர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி ஊராட்சிக்குள்பட்டது அலக்கட்டு மலை கிராமம். அடர் வனத்திற்குள் மொரப்பூர் பீட் எனப்படும் வனப் பகுதியில் அமைந்துள்ள இக் கிராமத்தில் லிங்காயத்து சமுதாய மக்கள் அதிக அளவு வசிக்கின்றனர்.  சுமார் 35-க்கும் மேற்பட்ட வீடுகளில் 100 பேர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளியை இந்த மலை கிராம மக்கள் கொண்டாடியதில்லை. இதற்கென சிறப்பு காரணம் ஏதுமில்லை எனவும் இக் கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும்,  ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மட்டும் வெகு உற்சாகமாக  கொண்டாடி வருகின்றனர். அதுவும், தீபத்திருவிழா அன்று கொண்டாடாமல், கார்த்திகை மாதத்தில் வருகிற இறுதி வாரம் திங்கள்கிழமை வழக்கமாக கொண்டாடுவது இவர்களது வழக்கம்.
இந்த நிலையில், நிகழாண்டு கார்த்திகை மாத இறுதி வாரத்தையொட்டி, திங்கள்கிழமை (டிச.10) இரவு தீபத் திருவிழா அலக்கட்டு கிராமத்தையொட்டியுள்ள அருள்மிகு பசவண்ணசுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது.  விடிய, விடிய செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இத் திருவிழாவால், அருகாமையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த மலை கிராமங்களான பெட்டமுகிலாளம், தொட்டமஞ்சி, கொடகரை, காமகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
முன்னதாக,  இரவு விழா தொடங்கி வழிபாடு முடிந்தவுடன் கோயில் வளாகத்தில் அனைவருக்கும் அரிசி சாதம்,  கேழ்வரகுக் களியுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,  பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க,  சூலம் போன்று தோற்றம் கொண்ட பச்சை மூங்கிலில் பந்தம் ஏற்றியபடி பெண்கள் கிராமத்தில் ஊர்வலமாக வந்தனர்.
மலைப் பகுதியில் சில்லென்று நிலவும் சீதோஷ்ண நிலையையும்,  பனியையும் பொருள்படுத்தாமல் இந்த ஊர்வலம் நள்ளிரவு வரை தொடர்ந்தது.  
இதையடுத்து,  அதிகாலை 3 மணி வரை கிராம இளைஞர்கள் கோயில் வளாகத்தில் நடனமாடினர்.  இதைத் தொடர்ந்து,  விழாவின் இறுதி நிகழ்வாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.  அப்போது, கோயிலுக்குள் பச்சை மூங்கில் தப்பைகளால் அமைக்கப்பட்டிருந்த மேடையில் 101 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.  
இந்த வழிபாடு நிகழ்ச்சி காலை 6 மணி வரை தொடர்ந்ததது.  விழாவில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபசவண்ணசாமி, மாதேஸ்வரா சுவாமிகள் மலை கிராம மக்கள் வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com