மனித குல வரலாற்று எச்சங்களைத் தேடும் தொல்லியல் சுற்றுலா!

தருமபுரி மாவட்டத்தில் எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்கால மனித குல எச்சங்களைத் தேடிக் கண்டறியும், பாதுகாக்கும் வகையிலான


தருமபுரி மாவட்டத்தில் எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்கால மனித குல எச்சங்களைத் தேடிக் கண்டறியும், பாதுகாக்கும் வகையிலான தொல்லியல் சுற்றுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம் சார்பில்
நடத்தப்பட்ட இந்தச் சுற்றுலாவில் தொல்லியல் ஆய்வாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், வரலாற்று மாணவர்கள் உள்பட 45 பேர் பங்கேற்றனர்.
தருமபுரி அரசு அருங்காட்சியத்தில் தொடங்கி இந்தப் பயணத்தில், மாரண்டஅள்ளி அருகேயுள்ள ராசிக்குட்டை பகுதியிலுள்ள கல்வட்டம், பாண்டவர்மலை பகுதியிலுள்ள கல்திட்டை, பாலக்கோடு அருகேயுள்ள பசிகம் பகுதியிலுள்ள நடுகற்கள், திருமல்வாடி பகுதியிலுள்ள குத்துக்கல், பென்னாகரம் சாலை ஆதனூர் பகுதியிலுள்ள கல்வட்டம் ஆகிய 5 இடங்கள் இடம்பெற்றிருந்தன.
பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய ஈமச்சடங்கு சின்னங்களாகக் கருதப்படும் கல்திட்டை, கல்வட்டம், குத்துக்கல் ஆகியவற்றைப் பற்றியும், வீரமரணம் எய்தியோரின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகற்கள் பற்றியும் ஓய்வுபெற்ற தொல்லியல் துறை உதவி இயக்குநரும் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் செயலருமான தி. சுப்பிரமணியம் சுற்றுலா குழுவினருக்கு விளக்கினார்.
இப்பயணத்தில் மையத்தின் புரவலரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் இரா. செந்தில், ஆய்வாளர் ஆ. அன்பழகன், பேராசிரியர் சந்திரசேகர், எழுத்தாளர் இரா. சிசுபாலன், நூலகர் சி. சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதுபோன்ற பயணங்களை நடத்தவும், மாவட்டத்திலுள்ள தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இரா. சிசுபாலன் தெரிவித்தார்.
தொல்லியல் ஆர்வலர்கள் மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருந்தாலும், தொடர் பணிகள் நடைபெற்று வந்தபோதிலும் இதுபோன்ற ஆர்வலர்களை அழைத்துச் செல்லும் சுற்றுலாவாக நடைபெற்றது மாநிலத்திலேயே இதுதான் முதல் முறை என்கிறார் ஆய்வாளர் ராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com