கர்ப்பிணிப் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்: ஆட்சியர்

கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்றார் தருமபுரி ஆட்சியர் சு.மலர்விழி.

கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்றார் தருமபுரி ஆட்சியர் சு.மலர்விழி.
தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், 1,480 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு மற்றும் சீர்வரிசை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை பாலக்கோடு மற்றும் தேவரசம்பட்டியில் நடைபெற்றது. விழாவில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி ஆட்சியர் சு.மலர்விழி பேசியது: பெண்கள் தான் மனித சமுதாயத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மட்டும் உள்கொண்டால் போதாது. உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை களைய வேண்டும்.
பேறு காலத்தில் தாய் எந்த மனநிலையில் உள்ளாரோ, அவருக்கு பிறக்கும் குழந்தையும் அதே மனநிலையில் இருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் கருவுற்ற, பாலூட்டும் பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு இணை உணவு மற்றும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
அறிவான, ஆரோக்கியமான அடுத்த தலைமுறை இருக்க வேண்டும் என்றால் பெண்களுக்கு 18 வயதுக்கு மேல் திருமணம் செய்ய வேண்டும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் கர்ப்ப காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்தவுடன் ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்தது முதல் 6 மாத காலத்துக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். உரிய காலத்தில் தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். 
இதில், மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் காளிதாசன், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில்நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். கே.அசோக்குமார் எம்.பி, சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) அன்பு குளோரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பேசியது: கர்ப்பிணிப் பெண்கள் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதித்து மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு சுகாதாரமாகவும், ஊட்டச் சத்துகள் அதிகம் உள்ள சத்துணவுகளை உண்டும் சுக பிரசவம் மூலம் குழந்தை பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்றார்.
இதில் பங்கேற்ற 640 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், குங்குமம் உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் 5 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை வட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் நாகராஜ், ஊத்தங்கரை நில வள வங்கித் தலைவர் சாகுல்அமீது, மிட்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தேவேந்திரன், ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள் குங்குமம் மற்றும் அணிகலன்களை வழங்கி சிறப்புரையாற்றினார். 
இதில் 276 கர்ப்பிணிப் பெண்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com