தருமபுரியில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீர்

தருமபுரியில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், பென்னாகரம் சாலைப் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

தருமபுரியில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், பென்னாகரம் சாலைப் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக இரவு நேரங்களில்  மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தருமபுரி - பென்னாகரம் சாலையில் உள்ள ஏஎஸ்டிசி நகர், நந்தி நகர், ஆவின் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.  அப் பகுதியினர் தங்களது குடியிருப்புகளுக்கு செல்ல முடியாமலும்,  அங்கிருந்து வெளியேற முடியாமலும் தவித்தனர். மேலும்,  குமாரசாமிப்பேட்டை மேம்பாலம் முதல் அதகப்பாடி வரை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட  பள்ளங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்த இரவு முழுவதும்  ஓடியது. அதேபோல  அந்த சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம், அரசுப் பள்ளி மைதானம் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் செவ்வாய்க்கிழமை மாலை வரை தேங்கி நின்றது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், பொக்கலின் இயந்திரம் மூலம் வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஏஎஸ்டிசி நகர்,  ஆவின் நகர், நந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் தாழ்வான பகுதி என்பதாலும், அப்பகுதியில் முறையான கழிவுநீர், மழை நீர்க் கால்வாய்கள் இல்லாததாலும், ஆக்கிரமிப்புகளாலும்  பலத்த மழை பெய்யும்போது, அப்பகுதியை மழைநீர் சூழ்ந்துவிடுவது வாடிக்கையாவிட்டது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியினர் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இவற்றைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகம், முறையான வடிகால்களை அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையளவு ( மி.மீட்டரில்):  தருமபுரி 55,  பாலக்கோடு 29,  மாரண்டஅள்ளி 37, பென்னாகரம்  25, ஒகேனக்கல் 24,  அரூர் 93, பாப்பிரெட்டிப்பட்டி 83.2.  மாவட்டத்தின் மொத்த மழையளவு 349.2. சராசரி மழையளவு 49.89.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com