குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

பாப்பாரப்பட்டி அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் .


பாப்பாரப்பட்டி அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் .
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்குள்பட்ட குறவன்திண்ணை, பலனாகட்டு மற்றும் தண்டுகாரனஅள்ளி பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்காக அப்பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. பருவமழை பொய்த்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் கடும் வறட்சி நிலவுவதால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.
இந்நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரானது முறையாக விநியோகிக்காமல் 5 நாள்களுக்கு ஒருமுறையும், குறைந்த நேரமே விநியோகிக்கபடுகிறது என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதனைக் கண்டித்து, பிக்கிலி-பாப்பாரப்பட்டி சாலையில் சனிக்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் பாப்பாரப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து சுமார் 1 மணிநேரம் பாதிக்கப்பட்டது.
இதேபோன்று பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 17-ஆவது வார்டு போயர் தெரு பகுதியில் முறையாக குடிநீர்  விநியோகம் செய்வதில்லையாம். இதுகுறித்து பென்னாகரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால்,சனிக்கிழமை பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பென்னாகரம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் காமராஜ், பேருராட்சி அதிகாரிகள் மற்றும் பென்னாகரம் போலீஸார், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com