வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

தருமபுரியில் மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் வாக்குப் பதிவுக்கு மின்னணு வாக்குப் பதிவு

தருமபுரியில் மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் வாக்குப் பதிவுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு பொதுத் தேர்தல் மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகின்றன.
இத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் 306 வாக்குச் சாவடி மையங்கள், பாலக்கோடு 262, பென்னாகரம் 291, அரூர் 299, பாப்பிரெட்டிப்பட்ட 314 மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 315 என மொத்தம் 1,787 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில், மாவட்டத் தேர்தல் அலுவலர், முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், வாக்குச் சாவடி மைய முதன்மை அலுவலர்கள், வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் எனத் தேர்தல் பணியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, 2,606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான பணி ஆணைகள் புதன்கிழமை தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்டன.
வாக்குப் பதிவுக்காக, தருமபுரி அரசுப் பொறியியல் கல்லூரியில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை, வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர் தேவேந்திர குமார் ஜெனா, இடைத் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் சஞ்சிவ்குமார் பெஸ்ரா, சாந்தராம் ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் சு. மலர்விழி திறந்து வைத்து போலீஸார் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம், எழுது பொருள்கள், விரல்களில் வைக்கப்படும் மை உள்ளிட்ட வாக்குச் சாவடி மையத்துக்குத் தேவையான பொருள்களை போலீஸார் பாதுகாப்புடன் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன், அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் கீர்த்தி பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில்
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல், ஒசூர் சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்தத் தேர்தலுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1,850 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போலீஸார் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒரு அறையில் "சீல்' வைக்கப்பட்டிருந்தன.
அனைத்து கட்சி நிர்வாகிகள்,  மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் சரவணன் முன்னிலையில்  அறையின் "சீல்' அகற்றப்பட்டு, 307 வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட், வாக்குச் சாவடி மையங்களுக்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை வாகனத்தில் ஏற்றி, போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. 
முன்னதாக வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும் பல்வேறு நிலை அலுவலர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com