ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள முதலைக் குட்டியைப் பிடிக்க கோரிக்கை
By DIN | Published On : 26th April 2019 03:04 AM | Last Updated : 26th April 2019 03:04 AM | அ+அ அ- |

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள முதலைக் குட்டியைப் பிடித்து, ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் பிரதான அருவில் குளிப்பதைத் தவிர்த்து, நாகர்கோவில், கோத்திக்கல் மற்றும் ஆலாம்பாடி பகுதிகளில் உள்ள ஆற்றில் குளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதில், 5 கிலோ எடை கொண்ட முதலைக் குட்டியானது அடித்து வரப்பட்டுள்ளது. இந்த முதலைக் குட்டியானது உணவு தேடி கோத்திக்கல் பகுதியில் சுற்றித் திரிகிறது. மேலும், கோத்திக்கல் பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது சில சமயங்களில் தாக்க முயற்சிக்கிறது என்று சுற்றுலாப் பயணிகள்கூறுகின்றனர்.
எனவே, ஒகேனக்கல் வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து, காவிரிஆற்றில் சுற்றித்திரியும் முதலைக் குட்டியைப் பிடித்து, ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.