ஆடிப்பெருக்கு விழா: கோயில், நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கோயில், நீர்நிலைகளில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கோயில், நீர்நிலைகளில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தருமபுரி அருகே நல்லம்பள்ளியை அடுத்த வனப்பகுதியில் உள்ள வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, தங்கக் கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட பிற பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயில் மூலமும், இருசக்கர வாகனம், ஆட்டோக்களிலும், நூற்றுக்கணக்கானோர் நடந்தும் வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் துளசி, எலுமிச்சை, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்களின் வருகையையொட்டி, பொம்மிடி போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டனர்.
இதேபோல, தருமபுரியில் கோட்டை காமாட்சியம்மன் கோயில், இலக்கியம்பட்டி மாரியம்மன் திருக்கோயில், செந்தில் நகர் புத்துக்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில்,திரளானோர் பங்கேற்று
வழிபட்டனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி அணை, அனுமன்தீர்த்தம், வேப்பனஅள்ளியை அடுத்த தீர்த்தம், பாரூர் அருகே உள்ள மஞ்சமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித
நீராடினர்.
கிருஷ்ணகிரியை அடுத்த கிருஷ்ணகிரி அணை தென்பெண்ணை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். புதுமணத் தம்பதியினர் புதிய தாலியை அணிந்துக் கொண்டனர். தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள மார்கண்டேஸ்வர கோயிலில் சுவாமியை வழிபட்டு, அங்குள்ள நந்தி வாயிலிருந்து வெளியேறும் நீரில் புனித
நீராடினர்.  
தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கர்நாடகம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிருஷ்ணகிரி அணையில் கூடினர். 
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஏராளமான போலீஸார் கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டனர்.
அரூரில்...
அரூர் வட்டம்,  டி.அம்மாப்பேட்டை தென்பெண்ணை ஆற்றில்  ஸ்ரீ சென்னியம்மன் திருப்பாறைகளுக்கு பக்தர்கள் மஞ்சள், குங்குமம் இட்டு, பழங்கள் மற்றும் பொறி, கடலைகள், பட்டாடைகள் வைத்து அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து, பக்தர்கள் பலர் தங்களின் நேர்த்திக் கடனாக முடிகாணிக்கை செலுத்தினர். அதேபோல்,  ஸ்ரீ  சென்னியம்மன் திருப்பாறைகளுக்கு ஏராளமான கோழி மற்றும் ஆடுகளை பக்தர்கள் பலியிட்டும், பொங்கல் வைத்தும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
இந்த விழாவில், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அரூர்,  ஊத்தங்கரை மற்றும் செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com