டிஜிட்டல் சாதனங்களின் அதீத பயன்பாடு மனிதனை தனிமைப்படுத்துகிறது: மருத்துவர் சிவபாலன்

டிஜிட்டல் சாதனங்களின் அதீத பயன்பாடு மனிதனை தனிப்படுத்துகிறது என்றார் மனநல மருத்துவர் சிவபாலன்.


டிஜிட்டல் சாதனங்களின் அதீத பயன்பாடு மனிதனை தனிப்படுத்துகிறது என்றார் மனநல மருத்துவர் சிவபாலன்.
தருமபுரி புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், டிஜிட்டல் போதையும், மனித உறவுகளும் என்ற தலைப்பில் மருத்துவர் சிவபாலன் பேசியது: தமிழகத்தில் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களின் தேவை தற்போது அதிகரித்துள்ளன. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இத்திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், எதுவும் வெற்றிடமாக இருப்பது ஆபத்தானது. அதுவும் அறிவுசார் வெற்றிடம் என்பது பேராபத்து. இந்த வெற்றிடம் இளைஞர்களின் கருத்தியல் பேதமையை அதிகரிக்கும். இது அவர்களை தீய வழிகளில் மடைமாற்றிவிடும். இதனைத் தவிர்க்கும் பணியை புத்தகங்கள் செய்யும். தனிமனிதனின் பிரச்னைகள் இச்சமூகத்தையும் பாதிக்கும்.
தற்போதைய டிஜிட்டல் சாதனங்களின் அதீத பயன்பாடு மனிதனை தனிமைப்படுத்துகிறது. ஒருவரோடு ஒருவர் உறவாட வைப்பதில்லை. குழந்தைகள் இத்தகைய சாதனங்களை பயன்படுத்துவதால், அதில் அவர்கள் மூழ்கிப்போகின்றனர். இதனால் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர். பிரச்னைகள் ஏற்படின், அதனைத் தீர்க்க வழிதெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும் வரை டிஜிட்டல் சாதனங்கள், அவர்களை கொண்டு செல்கின்றன.
சில பத்தாண்டு முன்பு நிகழ்ந்த தற்கொலை எண்ணிக்கைகள், தற்போது மேலும் கூடுதலாகி உள்ளன. எனவே, இது ஒருவகையில் போதை என கூறலாம். மேலும், அதையும் கடந்து அச்சாதனங்களுக்கு அடிமையாவது எனலாம். இதனால், மனிதன் உண்மை உலகத்திலிருந்து, வேறு உலகத்தில் மூழ்கிப் போகிறான். உண்மை உலகம் நம்மை அரவணைக்கும். டிஜிட்டல் சாதனங்கள் நம்மை புறக்கணிக்கும். இருப்பினும், இச்சாதனங்கள் அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப வகையிலும் நமக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றன. இதனை முற்றாக புறக்கணிக்க இயலாது.
எனவே, இதன் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும். இச்சாதனங்களை பயன்படுத்துவதில் நேரக் கட்டுப்பாடு இருத்தல் வேண்டும். குறிப்பாக 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய சாதனங்களை வழங்கக் கூடாது. அதேபோல, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பயன்பாட்டுக்கு வழங்கும்போது அவை நமது மேற்பார்வையில் இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சுய கட்டுப்பாடுகளால் டிஜிட்டல் போதையிலிருந்து விடுவித்து மனித நேயமிக்க சமூகத்தை உருவாக்க முடியும் என்றார்.
நிகழ்ச்சிக்கு, வருவான் வடிவேலன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வருவான் வடிவேலன், ரங்கா பல்பொருள் அங்காடி உரிமையாளர் இரா.துரை ஆகியோர் தலைமை வகித்தனர். ஓய்வுபெற்ற பொறியாளர் எம்.கார்த்திகேயன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.குமார், அரூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு, ஆசிரியர் ச.அறிவுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com