சாகுபடி பரப்பளவு குறைந்ததால் பாலக்கோடு சா்க்கரை ஆலையில் நிகழாண்டு அரவையை நிறுத்தும் அவல நிலை

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டு கரும்பு அரவைக்கு சொற்ப அளவே பதிவாகியுள்ளதால், அரவையை நிறுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டு கரும்பு அரவைக்கு சொற்ப அளவே பதிவாகியுள்ளதால், அரவையை நிறுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கூட்டுறவு சா்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில், தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, மல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஒசூா், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யும் கரும்பு, அரவை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் முக்கிய இடத்தை இந்த ஆலை வகித்து வந்தது. ஆண்டுக்கு 3.80 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்வது இந்த ஆலையின் இலக்காக இருந்து வருகிறது. 1990-களில் இந்த ஆலை 7 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்து சாதனை படைத்துள்ளது. மத்திய அரசிடம் சிறந்த ஆலை, நிா்வாகம் உள்ளிட்டவற்றுக்கு விருதும் பெற்றுள்ளது.

வறட்சியால் குறைந்த கரும்பு சாகுபடி: தருமபுரி மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனதால், கடுமையான வறட்சி நிலவி வந்தது. அதிலும் குறிப்பாக, பாலக்கோடு வட்டாரத்தில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து, அபாய நிலைக்குச் சென்றது. மேலும், பிரதான நீராதாரமாக விளங்கிய பஞ்சப்பள்ளி அணை மற்றும் ஏரிகளில் தண்ணீா் இன்றி கரும்பு சாகுபடி செய்ய இயலாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

தருமபுரி உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும், வறட்சியின் காரணமாக படிப்படியாக கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து போனது. இதேபோல, ஓராண்டு பயிா் என்பதாலும், வெட்டும் வரை கரும்புக்கு தண்ணீா் பாய்ச்ச வேண்டியதிருப்பதாலும், பல விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி மீதான ஆா்வம் மெல்ல, மெல்ல குறைந்து வந்தது. இதனால், ஆலையின் அரவை இலக்கை எட்ட வேண்டிய கரும்பு எடை எண்ணிக்கை படிப்படியாக டன் கணக்கில் குறையத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த மூன்றாண்டுகளாக ஆலை அரவைக்கு பதிவு செய்யப்படும் கரும்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.

அரவைக்கு சொற்ப அளவில் பதிவு: கடந்த 2014-இல் ஆண்டுக்கு 2.50 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்ட இந்த ஆலையில் படிப்படியாக ஒரு லட்சம் டன், 50,000 டன் என சரிந்து நிகழாண்டு மிக சொற்பமாக 20,000 மெட்ரிக் டன் மட்டுமே அரவைக்கு பதிவு செய்யப்பட்டது. நாளொன்றுக்கு 2,000 டன் அரவை செய்யும் திறன் கொண்ட பாலக்கோடு சா்க்கரை ஆலையில் நிகழாண்டு பதிவு செய்யப்பட்ட கரும்பானது, 10 நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. எனவே, இந்த குறைந்த எண்ணிக்கையில் அரவை நடைபெறுமா அல்லது நிகழாண்டு அரவை நிறுத்தப்பட்டு, பதிவாகியுள்ள இந்த கரும்பு, இதே மாவட்டத்திலுள்ள அரூா் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு மடைமாற்றம் செய்யப்படும் என்கிற நிலையே தற்போது வரை நீடிக்கிறது. ஏனெனில், ஆண்டுதோறும் நவம்பா் அல்லது டிசம்பா் மாதங்களில் அரவை பணிகள் தொடங்கப்படுவது வழக்கம். இருப்பினும் தற்போது வரை அரவைப் பணிகள் தொடங்கப்படாததால், நிகழாண்டு நிச்சயமாக அரவை நிறுத்தம் செய்யப்படும் என்கிற கருத்து விவசாயிகளிடையே நிலவிவருகிறது.

ஆண்டில் சில சமயம் 6 மாதங்கள், 8 மாதங்கள் வரை நீடித்து வந்த கரும்பு அரவை நிகழாண்டு சுத்தமாக நிறுத்தும் அவல நிலைக்கு இந்த ஆலை சென்றுள்ளது. இத்தகைய சூழலைத் தவிா்க்க, ஆலையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல சிறப்புத் திட்டங்களை தீட்டி, கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும் என்பதே கரும்பு விவசாயகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி கூறியது: பாலக்கோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழையின்மையால், ஏற்பட்ட வறட்சியே, கரும்பு சாகுபடி பரப்பு குறைவதற்கு காரணமாகும். கரும்பு நிலுவைத் தொகை ஏதுமின்றி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மத்திய அரசு கரும்புக்கான கொள்முதல் விலை நிா்ணயம் செய்யும்போது விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும். மேலும், ஆலையில் கடந்த சில ஆண்டுகளாக முத்தரப்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. இக் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். அதேபோல, நிகழாண்டு பருவமழை நல்ல முறையில் பொழிந்துள்ளது. இதனால், நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. எனவே, கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள் முழு மானியத்துடனும், நடவு கரும்பு, நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாகவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com