சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு:சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சடலத்துடன் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம்,  கடத்தூர் அருகே முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மணி. இவரது மனைவி ரேகா (27). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இத்தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த, ரேகா பிரசவத்துக்காக, கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை சேர்க்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் ரேகாவுக்கு அதிக உதிரப் போக்கு ஏற்பட்டதாகக் கூறி, அவரை தீவிர சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்படி அறிவுறுத்தப்பட்டதன் பேரில், செவ்வாய்க்கிழமை அதிகாலை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு சேர்த்தனர். இருப்பினும்,  அங்கு சிகிச்சை பலனின்றி ரேகா உயிரிழந்தார்.
இது குறித்து, தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ரேகாவின் சடலத்துடன் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்த ரேகாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அவர்கள் மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முயற்சித்தனர். இது தொடர்பாக, காவல் துணைக் கண்காணிப்பாளர் த.காந்தி, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ரேகா உயிரிழந்தது தொடர்பான புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து சமாதான அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு உடற்கூராய்வுக்கு பிறகு, ரேகாவின் உடலைப் பெற்றுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com