டாஸ்மாக் விற்பனையாளர் மீது துப்பாக்கியால் சுட்டு கொள்ளை வழக்கு: 2 பேர் கைது

அரூர் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பணம் பறித்த 2 பேரை தனிப் படை போலீஸார் கைது செய்தனர்.

அரூர் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பணம் பறித்த 2 பேரை தனிப் படை போலீஸார் கைது செய்தனர்.
 அரூர் அருகே உள்ள நரிப்பள்ளியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகரஜோதி (44).  இவர், நரிப்பள்ளி-பெரியப்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார்.  சனிக்கிழமை இரவு மது விற்பனைத்தொகை ரூ. 80 ஆயிரத்தை இரு சக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு நரிப்பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது,  இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் மகரஜோதியை துப்பாக்கியால் சுட்டனர்.  இதில் அவரது வலது,  இடது கைகளின் தோல்பட்டையில் குண்டு துளைத்தது.  நிலை தடுமாறி கீழே விழுந்த மகரஜோதியிடம் இருந்த பணம் ரூ.80 ஆயிரத்தை பறித்துக் கொண்டு,  மர்ம நபர்கள் தப்பினர்.
வாகனச் சோதனை: தகவலறிந்த தனிப்படை போலீஸார் அரூர்-நரிப்பள்ளி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது, மொண்டுகுழி அருகேயுள்ள தெத்துமுனியப்பன் கோயில் பகுதியில் சந்தேகமான முறையில் வந்த இருவரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 
அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை வட்டம், கலைஞர் நகரைச் சேர்ந்த சின்னக்கண்ணு மகன் வெங்கடேசன் (32),  ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த நாகேந்திரன் மகன் பரதன் (24) என்பது தெரியவந்தது.  மேலும்,  சோதனையில் அவர்களிடமிருந்து ரூ.80 ஆயிரம்,  ஒரு நவீன ரக கைத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்பு?  ஊத்தங்கரை வட்டம்,  காட்டேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையின் ஊழியர்கள் இருவரை கடந்த 15.12.2018-இல்,  நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு பணம் ரூ. 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.  இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெருமட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் மீது 25.1.2019-இல் தாக்குதல் நடத்தி, பணம் பறிக்கும் முயற்சிகள் நடைபெற்றன.  ஊத்தங்கரை மற்றும் செங்கம் பகுதியில் நடந்த சம்பவங்களில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேசன், பரதன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 
இதையடுத்து,  பிடிபட்ட இருவரிடமும் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
மேலும் 2 துப்பாக்கிகள் பறிமுதல் ?  
டாஸ்மாக் விற்பனையாளரை துப்பாக்கியால் சுட்டு பணம் பறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஊத்தங்கரைச் சேர்ந்த வெங்கடேசனின் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.  இந்த சோதனையில் வெங்கடேசன் வீட்டில் இருந்து ஒரு நவீன ரக கைத்துப்பாக்கியும்,  ஒரு நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
ஊத்தங்கரை அருகேயுள்ள காட்டேரியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கொள்ளையடித்த பணம் ரூ. 3 லட்சத்தில் இருந்து ஒரு நவீன ரக துப்பாக்கியை, சென்னையில் ரவுடி ஒருவரிடம் வெங்கடேசன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.  மேலும், இவர் வீட்டில் சண்டைக் கோழிகளை வளர்த்து வருகிறாராம்.  இந்த சண்டைக் கோழிகளை விற்பனை செய்யும் போது வட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலிடம் இருந்தும் துப்பாக்கிகளை வாங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com