கடன் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட வேண்டும்: ஆட்சியர் சு.மலர்விழி

கடன் திட்டத்தில்,  வங்கியாளர்கள்  நிர்ணயிக்கப்பட்ட இலக்கை  எட்ட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.

கடன் திட்டத்தில்,  வங்கியாளர்கள்  நிர்ணயிக்கப்பட்ட இலக்கை  எட்ட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  தருமபுரி மாவட்டத்தின் 2019 - 2020 ஆண்டிற்கான வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு  தலைமை வகித்து, திட்ட அறிக்கையை வெளியிட்டு  மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி பேசியது:  நபார்டு வங்கித் தயாரித்த வளம் சார்ந்த கடன் திட்டத்தைக் கணக்கில் கொண்டு இக் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமைக் கடன் திட்டங்களுக்காக ரூ.4655.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கடன் திட்டத்தை விட ரூ.400 கோடி அதிகமாகும். வேளாண்மை கடன் திட்டங்களுக்காக ரூ.3529.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைக்காட்டிலும் ரூ.364 கோடி அதிகமாகும். மேலும் இதில் வேளாண்மை முதலீட்டுக் கடன்களுக்கு ரூ.1058 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.614 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தக் கடன் அளவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட வர்த்தக வங்கிகளின் பங்கு ரூ.3935.35 கோடி, கூட்டுறவு வங்கிகளின் பங்கு ரூ.660.40 கோடி, கிராம வங்கியின்  (தமிழ்நாடு கிராம வங்கி) பங்கு ரூ.554.69 கோடி,  தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பங்கு ரூ.90.11 கோடியாகவும் இருக்கிறது. வங்கியாளர்கள் கடன் திட்டத்தை  திட்டமிட்டபடி செயல்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்கையும் எட்ட வேண்டும். அனைத்து அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் மானியக்  கடன் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்திட வேண்டும் என்றார். இந்தியன் வங்கியின் துணை மண்டல மேலாளர் என்.ரவிக்குமார், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் எம்.காளிதாசன்,  மகளிர்த் திட்ட இயக்குநர் ஆர்த்தி,  முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.கண்ணன் மற்றும் அனைத்து வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com